பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

127

தெருவிலே போகிறவர்கள், வருகிறவர்கள் கூக்குரல் கேட்டு நூலகத்துக்கு வெளியே கூடினார்கள். வரவர ஊர் முழுவதுமே அங்கே திரண்டுவிட்டது. ஊர் காவலர் சிலர் வந்து கூட்டத்தின் அமைதி காத்தார்கள். இதனால் கொலு மன்றத்தின் புகழ் ஆரவாரம் ஊரெங்கும் பரந்தது.

கொலுமன்றத்தின் நடவடிக்கைகளை இந்நிகழ்ச்சிகள் எதுவும் பாதிக்கவில்லை. தீர்மானங்கள், திட்டங்கள் போதிய நுணுக்க விரிவகற்சிகளுடன் நிறைவேற்றப்பட்டன.

“பாரத வீரனுக்கு வீர இளவரசனுக்குரிய கவசம் தலையணி, வாள், வில், அம்புத்தூணி, குதிரை ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும்." இது முதல் தீர்மானம்.

இதைச் செயற்படுத்துவதற்கு ஒரு செயற்குழு அமர்த்தப்பட்டது. அதில் அமைச்சன் முத்துக்குடும்பன், படைத்தலைவன் குளத்தூரான், பொருட்காப்பாளன் சித்தேசி, நிமித்திகன் நீலகண்டன், மருத்துவன் மணிவண்ணன் ஆகியவர்கள் இருந்தார்கள்.

"பாரத வீரன் வீரகுருவை அடைந்து அவர் வாழ்த்துப் பெறவேண்டும்”. இது இரண்டாவது தீர்மானம்.

"பாரத வீரன் குறைந்த அளவு மூன்றுநாள் இரவு பகல் காளி கோயிலில் உணவு உறக்கமில்லாமல் நோன்பிருக்க வேண்டும். அன்னை காளியின் திருக்காட்சியும் திருவருளும், வெற்றியுலாவுக்குரிய கட்டளையும் பெற வேண்டும். மூன்று நாள் இரவு பகலுக்குள் தேவி காட்சி தராவிட்டால், காட்சி தரும்வரை அவன் நோன்பை விடக்கூடாது.” இது மூன்றாவது தீர்மானம்.

மூன்றாவது தீர்மானம் நிறைவேறுமுன், மணிவண்ணன் எழுந்தான். “காளிதேவி இக்காலத்தில் நேரடியாகக் காட்சி யளிப்பாளா? இது நடக்கக்கூடியதா? காலம் கலிகாலமாயிற்றே!” என்று அவன் குறுக்குக் கேள்வி கேட்டான். ஆனால் நீலகண்டன் இதற்கு ஆணித்தரமான விடையளித்தான். “கலி காலத்தில் ஒரு பாரத வீரன் பிறக்கக்கூடுமானால், காளி ஏன் நேரடியாக வரக்கூடாது? வந்து காட்சி தரக்கூடாது?” இந்த ஆணித்தரமான எதிர்க் கேள்வி முதல் கேள்வியை மடக்கிற்று.