பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




128

அப்பாத்துரையம் - 39

முதல் தீர்மானம் தவிர, மற்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதில், செயற்குழு எதுவும் நிறுவப்படவில்லை. அவற்றைக் கொலுமன்றம் பாரத வீரன் தனிப் பொறுப்பிலேயே விட்டுவிட்டது.

கொலுமன்றம் இத்தீர்மானங்களுடன் முறைப்படி கலைக்கப்பட்டது. ஆனால் உடனடியாக, அதே மேடையிலேயே, முதல் தீர்மானத்தில் கண்ட செயற்குழுவின் முதல் கூட்டம் கூடிற்று.

தன் பதவிக்கேற்ப, அமைச்சன் முத்துக்குடும்பன் அதில் தலைமை தாங்கினான். பாரத வீரன் பார்வையாளனாக உடனிருந்தான்.

முத்துக் குடும்பனே திட்டத்தைத் தொடங்கி வைத்தான்.

"பாரத வீரன் இப்போது இளவரசன். ஆனால் மருதநாட்டு ளவரசியை மணப்பதால், அவன் மருத நாட்டின் வீர அரசனாகப் போகிறான். அத்துடன் வீர உலாமூலம் அவனே தமிழகத்தின் பேரரசனாகவும், தமிழுலகின் முதன்மைப் புகழரசனாகவும் ஆகப்போகிறான். ஆனாலும் வீர உலாவின் போது அவன் நிலை ஒரு வீரப் படைத்தலைவன் நிலையேயாகும். பாரத வீரனுக்கு நாம் தெரிந்தெடுக்கும் ஆடை அணிமணி ஏற்பாடுகள் இந்த எல்லாத் துறைகளுக்கும் பொருத்தமுடைய தாயிருக்க வேண்டும்.

“நாடக மேடையில் சில சமயம் இளவரசர் போருக்குச் செல்வதுண்டு. அவர் ஆடையணிமணிகள் அப்போது, இளவரசர் நிலைக்கும் பொருத்தமாயிருக்கும். படைத் தலைவர் நிலைக்கும் பொருத்தமாயிருக்கும். இதே ஆடையணிமணிகளே, பாரத வீரன் வெற்றியுலாவுக்குச் சிறப்பளிக்கும். என் கருத்து இதுவே” என்று அவன் கூறி அமர்ந்தான்.

தலைவர் கூறியதைக் குழுவினர் எவரும் மறுக்கவில்லை. குழு அதை ஏற்றுவிடும் என்றே தோன்றிற்று. ஆனால் இச்சமயம் பாரத வீரன் எழுந்தான். குழுவினர் பக்கமாகத் திரும்பினான். அவன் முகம் கோபத்தால் சிவந்திருந்தது.

"அன்பர்களே! இளவரசன் படைத்தலைவன் ஆகிய இருவர் கூறுகளும் என்னிடம் இருப்பது உண்மையே.