மருதூர் மாணிக்கம்
137
புற்றைக் கண்டு வியப்படைந்தான். விளையாட்டாக அவன் வாளால் அதைக் குத்தினான். குத்திய இடம் தொப்பென்று விழுந்தது. உள்ளே துருப்படிந்த இரும்புச் சக்கரம் தெரிந்தது. அவன் வியப்படைந்தான். புற்றை அகற்றும்படி
கட்டளையிட்டான்.
அது கருங்காலியும் ஈட்டியும் தேக்கும் கொண்டு செய்த ஒரு சிறு தேர். சக்கரமும் அச்சும் தூண்களும் இரும்பாலானவை. அதன் புற வேலைப்பாடுகளும், சிறு சட்டங்களும்தான் இற்றுப்போயிருந்தன. உட்சட்டம் முழுவதும் அப்படியே இருந்தது.மொத்தத்தில் தேர் மிகுதி கெடவில்லை. ஆனால் பளு மிகவும் குறைந்திருந்தது. சக்கரங்களுக்கு நெய் பூசி, மெருகிட்ட பின், ஒரு சிறுவனால் கூட அதை இழுக்க முடிந்தது.
புற்றின் அருகேயுள்ள புதர்களில் ஒரு கழுதை மேய்ந்து கொண்டிருந்தது. அது இளங் கழுதைதான். ஆனால் ஒட்டி உலர்ந்திருந்தது. சீடர்கள் அதற்குத் தீனி வைத்தார்கள். தண்ணீர் காட்டினார்கள். பின் அதையே தேரில் பூட்டினார்கள். புதுத் தீனியின் கிளர்ச்சியால் கிளர்ச்சியால் அது தேரைக் கடகடவென்று இழுத்தோடி வந்தது.
வெற்றியுலாவின்
முதல் ஏற்பாடுகள் இங்ஙனம் வெற்றிகரமாக முடிந்தன. ஏற்பாடுகளின் கடைசிக் கட்டமாக, செயற்குழு அன்றே கூடிற்று. மணிவண்ணன் இதில் யாவரும் மகிழும் புதுக் கருத்துரைகள் வழங்கினான்.
“அன்பர்களே! வெற்றியுலாவில் பாரத வீரன் பல நாட்கள் செல்ல வேண்டிவரும். பாலைவனங்கள், மலை காடுகள் கடக்க வேண்டியிருக்கும். இத்தகைய உலா முழுவதற்கும் தேர் பயன்படாது. குதிரையே பயன்படும். ஆகவே உலாவுக்குப் பீடிகையாக, வீரகுரு நாடிச் செல்லும் போது, அவரைத் தேரிலேற்றி வழியனுப்புவோம். உலாவிலிருந்து மீளும்போதும் வீரகுருவின் இல்லத்திலிருந்து தேரில் புகழுடன் அழைத்து வருவோம். மற்றச் சமயங்களில் குதிரையே போதுமானது என்று கருதுகிறேன்” என்றான்.
இதை யாவரும் ஒப்புக் கொண்டனர். அவன் மேலும் பேசினான்.