5. குருவருளும் திருவருளும்
விடிய ஒரு யாமத்திலேயே பாரத வீரன் தேரை அவன் சீடர்கள் ஒப்பனை செய்தார்கள். வெள்ளொளி வீசிய நாலு குதிரைகள் விசயன் தேர்க் குதிரைகளை நாண வைத்தன. விசயன் அனுமக் கொடி பறந்த இடத்தில் ஒரு வானவில்லே பறந்தது. சீடகோடிகளின் கற்பனைத் திறமை அருமையாக வேலை செய்தது. அதன் மூலம் வான வில்லின் ஏழு வண்ணப் பட்டைகளும் கொடியில் தீட்டப்பட்டிருந்தன.
இந்திரனிடமிருந்து வந்த கதிரவன் கவசம், இந்திரன் படைக் கலங்கள், இந்திராணியின் தேர் ஆகியவற்றுடன் இந்திரவில்லின் கொடி மிகவும் பொருத்தமாய் அமைந்தது.
மேலும் பாரதப் போரில் கண்ணன் விசயன் சாரதியாய் இருந்தான். குறை அவதாரமாகிய விசயனுக்கு ஒரு நிறை அவதாரம் பெருமை அளிக்கவேண்டி வந்தது. ஆனால் பாரத வீரனோ முழு நிறை அவதாரம். ஆகையால் அவன் தானே தன் தேரை ஓட்டினான். தேரின்முன் வழக்கப்படி இசைக்குழுவினர் வீரநாமாவளி பாடிச் சென்றனர். படைவீரரும் பொதுமக்களும் வெற்றி முழக்கங்கள் முழங்கினார்கள்.
மாநகருக்கு அப்பால் குதிரைமுடித் தேரி என்றொரு பாலைவனம் இருந்தது. அதன் எல்லையை அணுகுவதற்குள் கிழக்கு வெளுத்துவிட்டது. அவ்விடம் வரை வந்து மக்கள் தம் வீரத்தலைவனை வழியனுப்பினர். சீடரும் சிறிது தொலை சென்று பிரியா விடைபெற்றுத் திரும்பினர். திரும்பும் சமயம் அவர்கள் பாரத வீரனிடம் ஒரு விலையேறிய பரிசை அளித்தார்கள். அது இளவரசி அவனுக்கு அவர்கள் மூலம் அனுப்பியிருந்த அன்புச் சின்னம். தன் முன்தானையின் ஒரு துண்டையே அவள் இதற்காகக் கிழித்து அனுப்பி