கு
அப்பாத்துரையம் - 39 (146) ||. பழிதீர்த்து ஆட்கொள்ள வேண்டும். ஏகலைவனைப் போலப் பெருவிரலைத் தரக்கூட நான் தயங்கமாட்டேன். என் உடலையும் உயிரையுமே உமக்கு அடைக்கலமாகத் தந்தேன். எனக்கு வில்வித்தை, வாள்வித்தை, வெடிப்படைவித்தை எல்லாம் கற்றுத் தரவேண்டுகிறேன். உலகமெலாம்வென்று வெற்றிப் புகழ் உலா நடாத்தி மீளவும் இளவரசியைப் பெற்று வாழவும் திருவருள் பாலிக்கக் கோருகிறேன். இவ்வளவும் கருணை செய்வதாக வாக்களிப்பதுவரை உம் தங்கத் திருவடிகளை விடமாட்டேன்" என்று அவன் கதறினான்.
பாரத வீரன் 'குதிரை’க்கும் அதே குருவைக் காணும் துடிப்பு மிகுதியாயிருந்தது. அவன் ஒரு வீரகுரு என்பதை அது அறியாவிட்டாலும், அவனே தன்னை வளர்த்த வண்ணான் என்பது அதற்குத் தெரிந்திருந்தது. ஆகவே அந்தக் குதிரையும் பாரத வீரனுடன் போட்டியிட்டு ஓடி வந்தது. அதுவும் விலங்கு மொழியிலே வணக்க இணக்கம் தெரிவித்தது. தன் இன மரபுப்படி விலங்குக் காம்போதிப் பண் உயர்த்தி வீரப்புகழ் பாடிற்று.
பாரத வீரன் செயலைவிட, கழுதையின் செயல் வண்ணானுக்கு நன்கு விளங்கிற்று. அவன் மொழியைவிட, அதன் மொழி நன்கு புரிந்தது. நெடுநாளைக்குமுன் தான் விற்றுவிட்ட தன்செல்வம் அது. இதை அவன் அறிந்து கொண்டான். அந்தத் துறைக்கு உரிய தெய்வத்தின் செவியில், தன் உள்ளத்தின் வேண்டுதல் கேட்டிருக்க வேண்டும். அதனால்தான் தன் செல்வம் தன்னை வந்தடைந்திருக்கிறது என்று அவன் எண்ணினான்.
அவன் முயற்சியோ, செலவோ இல்லாமல், அவன் செல்வம் அவனை வந்தடைந்தது. இது கண்டு, அவன் பெருமகிழ்ச்சி கொண்டான்.
பாரத வீரன் சொல்வது அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் கழுதையைப் பெற்ற மகிழ்ச்சியால், அவன் பாரத வீரனையும் ஏற்றான். கழுதையை ஆரத்தழுவிய கையாலேயே, அவன் பாரதவீரனையும் தழுவினான். பாரத வீரனுக்கு எல்லா உதவியும் செய்வதாக வாக்கும் அளித்தான்.