மருதூர் மாணிக்கம்
147
கழுதைமீது வண்ணான் தன் மூட்டைகளை ஏற்றினான். வீட்டுக்குப் புறப்பட்டான். கழுதையுடன் வந்த பாரத வீரனை விட்டுப்போக விரும்பவில்லை. அவனையும்
அவன்
உடனழைத்தான்.
தன் குரு தன்னை ஏற்றார் என்ற மகிழ்ச்சியால், பாரத வீரனுக்கும் தலைகால் தெரியவில்லை. அவன் வீர குருவின் பணிக்கே தன் ‘குதிரை’யை ஒப்படைத்தான். அதேசமயம் அவன் தன் தேரைத் துறையிலேயே விட்டுச் செல்ல விரும்பவில்லை. அதைத் தானே இழுத்துக்கொண்டு புறப்பட்டான்.
அந்த வண்ணான் பெயர் செங்கோடன். அவன் மனைவி கண்ணாயிரம்.நல்ல செயலான குடும்பத்தில் பிறந்தவள். செல்வ வளமுள்ள நிலையிலேயே அவள் கணவன் வீட்டுக்கு வந்தவள். அதனால் அவர்கள் முதற் குழந்தை வள்ளி செல்வமாக வளர்ந்தாள். சிறிது தொலைவிலுள்ள மெய்ஞ்ஞானபுரம் என்ற நகரத்தில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஒன்று இருந்தது. அவள் அதில் படித்துப் பத்தாம் வகுப்பும் தேறியிருந்தாள். ஆனால் தந்தை நொடித்தபின், அவள் படிப்பு மதிப்பிழந்தது. அது குடும்பத்துக்கு ஒரு சுமையாயிற்று. ஒரு படித்த ஏழைப் பெண்ணை மணந்து கொள்ள, வண்ணார இளைஞர் எவரும் விரும்பவில்லை.
வண்ணான் வரும்போது, வள்ளி வெள்ளாவியைத் துழாவிக்கொண்டிருந்தாள். கண்ணாயிரம் தன் சிறு புதல்வன் சேந்தனுக்குக் கஞ்சி ஊற்றிக் கொண்டிருந்தாள்.
வண்ணானுடன் வரும் கழுதையைக் கண்டு அனைவரும் வியப்பும் ஆர்வமும் கொண்டனர். ஆனால் பாரத வீரனைக் கண்டபோது, கண்ணாயிரத்துக்கு வியப்பு மட்டுமே ஏற்பட்டது. கழுதை இனி தங்கள் வீட்டிலேயே இருக்கும் என்று கூறி, வண்ணான் மனைவியை ஊக்கினான். அது கேட்டு அவள் மகிழ்ச்சி கொண்டாள். ஆர்வத்துடன் கழுதைக்குத் தீனி வைத்தாள். அந்த மகிழ்ச்சியிடையே பாரத வீரனைப் பற்றியும் வண்ணான் பேசினான். பாரத வீரன்மீதும் மனைவியின் ரக்கத்தைத் தூண்ட அவன் எண்ணினான்.
“பாவம்! அவன் அறிவு நல்ல நிலையில் இல்லை என்றே தோற்றுகிறது. ஆயினும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன்.