பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152

அப்பாத்துரையம் - 39

பாலைவன வழியில் அவன் கால்நடையாகவே நடந்தான். 'இராவணன் மீசை’கள் காலைக் குத்திக் கிளறின. வெயில் அனலாய்க் கொளுத்திற்று. வீரகுருவின் குடும்பப்பாசம் சில நாட்களாக அன்னை திருநாமத்தைச் சிறிது மறக்கடித்திருந்தது. வட்டியும் முதலுமாக அவன் அத்திருநாமத்தை ஓதினான். மறதிக்குக் கழுவாயாக அவன் நடுப்பகல் வெயிலிலும் ஓய்வு கொள்ளாமல் நடந்தான். உண்மையில் அவன் ஓய்வு கொள்ள நினைத்தாலும் அங்கே நிழல் எதுவும் இல்லை.

/

நண்பகல் சாய்ந்தது. கானல் தகதகவென்று பறந்தது. அவன் உடல் எரிந்து கரிந்தது. ஊதைக் காற்று வாரி வீசிய மணம் காதுகளைத் தூர்த்தன. கண்களை உறுத்தின. மூச்சு விடுவதைக் கூடத் தடைப்படுத்தின. ஆனால் அவன் பின்னும் தள்ளாடித் தள்ளாடி நடந்தான். அவன் உடல் விசையகன்ற இயந்திரப் பொறிபோல ஆடி ஓடி அலைந்தது.

மாலை நேரத்தில் அச்சந்தரும் ஓர் உருவம் பாரத வீரன் வழியில் குறுக்கிட்டது. வேறு யாரானாலும், அதைக் கண்டு மிரண்டோடியிருப்பார்கள். ஆனால் பாரத வீரன் அதை அணுகினான். அது மனித உருவம்தான். ஆனால் புதர்க்காடாக வளர்ந்த தாடி மீசைக்குள், அவன் முகம் புதைந்திருந்தது. பாம்புக்காடாக நீண்டு வளைந்து புரண்ட சடைமுடியில், அவன் உடல் புதைந்திருந்தது. அவன் ஆடை தோலாடை. காலில் அவன் நீண்ட கால்கட்டை போட்டிருந்தான். ஒரு கையில் முழுத் தேங்காயளவு பெரிய ஒரு மண்டை ஓடு இருந்தது. மற்றக் கையில் ஆளுயரம் நீண்ட ஒரு கவர்க்கோல் இருந்தது. அவன் ஓயாமல் முனகிக்கொண்டும், அவ்வப்போது அலறிக்கொண்டும் இருந்தான்.

அவன் ஒரு காபாலிகன், 'சிவ சிவ சிவ சிவ' என்ற ஓசையே அவன் முனகல். இடையிடையே 'சிவோம்ஹர' என்ற ஒலி தான் அவன் அலறலாய் அமைந்தது.

"பெரியீர்! நான் காளியின் அருள்நாடி வருகிறேன். அருகில் காளியின் திருக்கோயில் எங்கிருக்கிறது என்று அறிவிப்பீரா?" என்று பாரத வீரன் பணிவுடன் கேட்டான்.