160
அப்பாத்துரையம் - 39
நேரில் வருகிறாள்! பூதங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா?” என்று நன்னயப் பட்டர் கேலிசெய்தார்.
கோமாறன் திட்டம் வெற்றி பெற்றது. ஆனால் புதுப் போக்கை நிறுத்தவே, அவர்கள் அத்திட்டம் கொண்டு வந்தார்கள். எதிர்பாராத வகையில் அது அப்போக்கை வளர்த்தது. பாரத வீரன் கற்கி அவதாரமே என்பதற்கு அது இன்னொரு சான்றாயிற்று. ஏனெனில் அதனால்தான் பூத உலகும், அரக்கர் உலகும் தம் புது எதிரியைக்கண்டு பொறாமையுற்றன. கண்டு அஞ்சித் தடுப்பு நடவடிக்கையில் இறங்கின. இந்த எண்ணங்களால் பாரத வீரனின் புதுப்போக்கு வலுத்தது. அவன் அது முதல் கவசத்தையும் குதிரை முகத்தையும் அகற்றாமலே உண்ணவும் உறங்கவும் தலைப்பட்டான்.
குதிரைமுகத்தோடு அவனால் தெளிவாகப் பேச முடியவில்லை. அவன் பேச்சுக் கிட்டத்தட்டக் குதிரையின் கனைப்புப் போலவே, அமைந்தது. ஆனால் சீடகோடிகள் அது கண்டு அவனை இன்னும் பெருமைப்படுத்தினார்கள். கற்கி முகத்துடன் கற்கி குரலும் வந்துவிட்டது என்றார்கள்.
கற்கி முகத்தை எடுக்காமல் அவனால் ஒரு உருண்டை சோறுகூட உண்ண முடியவில்லை. ஒரு குவளை நீர்கூடக் குடிக்க முடியவில்லை. ஆனால் சீடகோடிகள் இது கண்டு சளைக்க வில்லை. அவர்கள் ஒரு வளைகுழலுடன் ஒரு ஊற்று குழாயைப் பொருத்தினர். அதன் மூலமாக வாய்க்குள் குதிரைமுக வழியாக நீர் ஊற்றினர். உணவையும் அவர்கள் நீரில் கரைத்து நீராகாரமாகவே அருந்தச் செய்தார்கள்.
குதிரைமுகத்தோடு அவனால் நிலத்தில் தலைவைத்துப் படுக்க முடியவில்லை. சீடகோடிகளின் திறமை இதிலும் அவனுக்குப் பெருத்த உதவியாயிற்று. பல செங்கல்களை உடைத்து, அந்தத் துண்டுகளால், அவர்கள் அவன் தலைக்கு அண்டை கொடுத்தனர். சுத்த வீரரான வீட்டுமாச்சாரிக்கு அம்புகளாலேயே விசயன் தலைக்கு அண்டை கொடுத்தான். தைப் பாரத வீரன் நினைவூட்டிச் சீடர்கள் அறிவைப் பாராட்டினான்.