மருதூர் மாணிக்கம்
161
சீடகோடிகளுக்கு இப்போது ஒரே ஒரு கவலைதான் மிஞ்சி இருந்தது. வீர உலாவுக்கேற்ற வீரப்பாங்கனைத் தேர்ந்தெடுக்கும் படி, அன்னை கட்டளையிட்டிருந்தாள். அத்தகைய பாங்கனை எங்கே கண்டுபிடிப்பது? இது தெரியாமல் அவர்கள் விழித்தனர்.
பாரத வீரன் சீடர்களை ஒவ்வொருவராகப் பரிசீலனை செய்து பார்த்தான். யாரும் ஒத்து வரவில்லை. ஏனெனில் அவன் கருதிய தகுதி யாருக்கும் இல்லை. அத்துடன் யாரும் அந்தப் பெரிய பொறுப்பை ஏற்க முன் வரவுமில்லை. அவர்கள் இதுவகையில் கவலை கொண்டார்கள். ஆனால் பாரதவீரன் ஆறுதல் உரைத்தான். “வீரகுரு தாமாகத் தான் வந்து கிட்டினார். அதுபோலப் பாங்கனும் தானாக வந்து சேருவான்” என்றான்.
அவன் கூறியது பொய்க்கவில்லை. எல்லா வகையினும் பொருத்தமான ஒரு பாங்கன் ஒருசில நாளில் வந்தான். அவன் தானாகவே பாரத வீரனை தேடிக்கொண்டு வந்தான்.
அவன் பெயர் தப்பிலியப்பன். அவன் பாரத வீரன் வீர குருவின் அண்ணன் மகன்தான். அவனைவிட மிக நல்ல உழைப்பாளி எங்கும் கிடையாது. ஆனால் அவனுக்கு மூன்று பெண் குழந்தைகளும், இரண்டு ஆண்குழந்தைகளும் இருந்தார்கள். அந்தப் பெரிய குடும்பத்துக்குக் குடும்பத் தொழிலின் ஊதியம் பற்றவில்லை. எளிதாக மிகுதியான பணம்பெற அவன் வேறு தொழில்களை நாடினான். புன்செய்க் காடுகளில் அவன் வேலை செய்து பார்த்தான். விறகு வெட்டி விற்றுப் பார்த்தான். இறுதியில் அருகிலுள்ள சர்க்கரை ஆலையில் ஒரு குத்தகை எடுத்தான். ஆலைக்கு வேண்டிய வெல்லப்பாகும் விறகும் தருவித்துக் கொடுத்தான். என்றாலும் அவன் வறுமை தீரவில்லை. சர்க்கரை ஆலையும் திடுமென நிறுத்தப்பட்டு விட்டது. அவன் வேலையோ வேலை என்று அலைந்தான்.
பெரியப்பனைத் தேடி வந்த புது வாழ்வின் செய்தி அவன் செவிக்கு எட்டிற்று ஏழையானபின், தங்கை வள்ளியின் படிப்பு அவளைத் தீண்டுவாரற்றவளாக்கியிருந்தது. இப்போது அவளுக்கு வந்த புது மதிப்பைப் பற்றியும் அவன் கேள்விப் பட்டான். அவன் பெரியப்பன் வீடு சென்றான். பெரியப்பன், பெரியம்மை, வள்ளி எல்லாரிடமும் பேசினான்.