7. சிங்கத்தை வென்ற வீரசிங்கம்
சிங்கத்தைப் போன்றவர்கள் என்று தான் எல்லாரும் வீரர்களைப் புகழ்வார்கள். ஆனால் எடுத்த எடுப்பிலேயே பாரத வீரன் சிங்கத்தை வென்ற வீரசிங்கம் ஆனான். அவ்விருதுப் பெயரும் பெற்றான். எவரும் காணவே அஞ்சும் சிங்க ஏறு அவன் முன் பங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி அவன் வெற்றி உலாவின் புகழுக்கு ஒரு முகப்பு வாயிலாய் அமைந்தது.
செல்லாயியும், செங்காவியும் எப்போதும் பாரத வீரன் மீதே கண்ணாய் இருந்து வந்தார்கள். கோமாறனும், நன்னயப்பட்டரும் அவனை இராப் பகல் இடைவிடாது அகலாதிருந்தார்கள். ஆனால் சீடர்கள் இதை எதிர்பார்த்தே யிருந்தனர். உலாத் தொடக்கம் நள்ளிரவு என்ற அதனாலேயே குறிக்கப்பட்டிருந்தது. அச்சமயம் எல்லாரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். பாரத வீரன் தான் படுத்த இடத்தில் ஒரு தலையணையை இட்டு மூடினான். ஓசைப்படாமல் பின்வாயில் வழியாக வெளியேறினான்.
க
சீடர்களும் பட்டி மந்திரியும் அவனுக்காக ஊர் வெளியில் காத்திருந்தார்கள். அவர்கள் அவனை ஆர்வத்துடன் வரவேற்றார்கள்.
அச்சமயம் அனைவரும் காண, பட்டி மந்திரி பார்த வீரன் திருவடிகளில் விழுந்தான். பின் மும்முறை வலம் வந்து வணங்கினான். வழிபாடாற்றினான். “என்னை மன்னனாக்கப் போகும் மன்னர் மன்னனே! உம் வெற்றிக் கொடி மண்ணும் விண்ணும் பறப்பதாக!" என்று வாழ்த்தெடுத்தான்.
பட்டி மந்திரியின் பக்தியைச் சீடர்கள் மெச்சினார்கள். ஆனால் ஒரு சிலர், அவன் பக்தியில் கூட ஒரு யுக்தி இருக்கிறது என்று குறும்பு பேசினார்கள்.