மருதூர் மாணிக்கம்
171
நிமிர்ந்து நோக்கினான். முன்னணியைத் தடுத்து நிறுத்திப் பேசினான்.
“மன்னர் மன்னன், கண்கண்ட கற்கி, பாரத வீரன் வழியில் குறுக்கிட நீங்கள் யார்? எங்களை வணங்கி வழிவிட்டுத் தப்பி யோடுங்கள்! இல்லையானால்..." என்று அவன் அதட்டினான்.
அணி நிற்கவில்லை. முன்னேறி வந்தது. தலைவனாக முன்னால் வந்தவன் எதுவும் பேசவில்லை. ஆனால் அடுத்து நின்ற ஒருவன் எச்சரிப்பு முறையிலே பேசினான்.
"நீ யாரப்பா, சிங்கத்தின் பாதையில் அஞ்சாமல் வந்து நிற்கிறாய்? அது காட்டுக்கு அரசன். புதிதாக ஆட்சிக்கு வந்த நாட்டு அரசனிடம் அது போகிறது. நாங்கள் இவ்வளவு கட்டுக்காவல் வைத்திருக்கிறோம். அப்படியிருந்தும் அது ஒவ்வொரு நாளும் கட்டுமீறி ஒன்றிரண்டு ஆட்களைக் கொன்று தின்று விடுகிறது. அதன் பாதையில் அருகே கூட நிற்காதே ஓடி விடு” என்றான்.
பாரத வீரன் அசையவில்லை. “ஓடுவது நானல்ல. நான் தான் கற்கி. உங்களைப்போல் ஒரு நாலுகால் விலங்குக்கு அஞ்சும் கோழையல்ல நான்? உங்கள் காட்டு அரசனும் நீங்களும் எனக்கு வணக்கம் செய்து வழிவிட்டுத் தப்பலாம். இல்லாவிட்டால் அனைவரையும் ஒழித்துக்கட்டி விடுவேன்” என்று அவன் வீறாப்புடன் பேசினான்.
தலைவன் அருகே வந்துவிட்டான். “பைத்தியக்காரக் கோமாளி! போகிறாயா, இல்லையா?" என்று கூறிய வண்ணம் அவன் பாரத வீரனை நோக்கி ஒரு அடி முன்னேறினான்.
அவன் எதிர்பாராதவகையில் அவன் தலையில் ஓர் அடி விழுந்தது. அது பாரத வீரன் ஈட்டியின் அடி அவன் கீழே விழுந்தான். தலைவன் விழுந்தது கண்ட வீரர்கள் சீறினர். ஈட்டியால் பாரதவீரனை மடக்கித் தாக்க முனைந்தனர். பாரத வீரன் தன் கோவேறு கழுதையை அவர்களிடையே வலசாரி இ சாரியாகச் செலுத்தினான். இருபுறமும் சிலம்பம்போல ஈட்டியைச் சுழற்றினான். பலர் விழுந்தனர். பலர் ஓடிப் போயினர். சிலர் தங்கள் வெடிப்படைகளை அவனை நோக்கி நிறுத்திக் குறிபார்த்தனர். ஆனால் கோவேறு கழுதை பாய்ந்த வேகத்தில்,