மருதூர் மாணிக்கம்
175
அவன் மூளை இப்போது அவனுக்கு உதவிற்று. அவன் கால தாமதம் செய்யவில்லை. கழுதைமீதே ஏறினான். வலுக்கொண்ட மட்டும் அதைக் காலால் உதைத்துத் தட்டி விட்டான். நல்லகாலமாகச் சிறிது தொலைவில் பாழடைந்த கோட்டை ஒன்று இருந்தது. கழுதையுடன் அவன் அதனுள் புகுந்தான். அங்குள்ள ஒரு கொட்டிலில் அவன் கழுதையைக் கட்டிப்போட்டான். கொட்டிலின் கதவை வெளியேயிருந்து அடைத்துவிட்டான்.
அங்கே ஒரு ஏணி இருந்தது. அதனுதவியால், பட்டி மந்திரி ஒரு உயர்ந்த மதிலின்மேல் ஏறிக்கொண்டான். சிங்கம் ஏணியில் ஏறி வந்துவிடுமோ என்று கூட அவன் அஞ்சினான். ஆகவே ஏணியை அவன் மதில்மேலேயே ஏற்றி வைத்துக்கொண்டான். இந்த நிலையிலும் அச்சம் அவனை விட்டபாடில்லை.
“ஒரு நாடு பெறுவதற்காகக்கூட இந்தமாதிரி வீரனுடன் வந்தது தவறு!" இவ்வாறு அச்சமயம் பட்டி மந்திரி தனக்குள்ளாகக் கூறிக்கொண்டான்.
வண்டியோட்டிக்கும் ஒரு பாழடைந்த வீடு கிடைத்தது. மாடுகளை அவன் அதற்குள் போட்டு அடைத்தான். அவனும் கதவை வெளியிலிருந்தே கொண்டியிட்டான். ஒரு கெட்டிக் கழியால் கொண்டியை இறுக்கினான். இவ்வளவு பாதுகாப்புக்குப் பின் அவன் கூட்டண்டை விரைந்து வந்தான்.
பாரத வீரன் இவ்வளவு நேரமும் ஏந்திய ஈட்டியுடன் கூண்டையே பார்த்துக் கொண்டிருந்தான்.
வண்டியண்டை சென்றபின், வண்டியோட்டி மீண்டும் ஒருமுறை பாரத வீரனிடம் வாதாடிப் பார்த்தான்.
"ஆண்டே, என்னளவில் நான் சிங்கத்துக்கு அவ்வளவாக அஞ்சவேண்டியதில்லை. நான் அதனுடன் பழகியவன். தப்பவாவது எனக்கு வழி தெரியும். உங்களுக்காகவும் நான் அஞ்சவில்லை. ஏனெனில் நீங்கள் அஞ்சாநெஞ்சர். ஆனால் சிங்கம் அடுத்த ஊர்களுக்குச் சென்று அட்டூழியம் செய்யுமே! அதற்காவது சற்று இரக்கப்படுங்கள். மேலும் அந்தச் செயலுக்காக, அரசியலார் என்மீதுகுற்றஞ் சாட்டுவார்கள்,