பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 39

176 || எனக்குத் தண்டனை கொடுப்பார்கள். அதை எண்ணிப் பாருங்கள்” என்றான்.

"சிங்கம் ஊருக்குள் போகவேண்டுமானால், என்னையும் உன்னையும் கொன்றுவிட்டுத்தானே போகவேண்டும்! அதற்கு ஏன் கவலைப்படுகிறாய்? மேலும் இது என் செயல், உன் செயலல்ல! என் சீடர்கள் மரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக் கிறார்களே, அவர்கள் அத்தனை பேரும் உனக்குச் சான்று கூறுவார்கள்! அவர்களறியக் கூறுகிறேன். சிங்கத்தை நீ திறந்துவிடு!” என்று பாரத வீரன் உச்சக் குரலில் கூவினான்.

வண்டியோட்டிஇப்போது முற்றிலும் துணிந்து விட்டான். கடைசிப் பூட்டுத் திறந்தவுடன், அவன் கூண்டின் உச்சியில் ஏறிவிடவே திட்டமிட்டிருந்தான். அதற்கு வாய்ப்பாக அவன் நின்று கொண்டான்.

பூட்டுக்கள் ஒவ்வொன்றாக அகன்றன. அகற்றிய பூட்டுக்கள் கூண்டின் முகட்டிலேயே வைக்கப்பட்டன. கம்பிப்பட்டைகள், சங்கிலிகள் ஒவ்வொன்றாக விலகின. கடைசிப் பூட்டைத் திறக்குமுன் வண்டி ஓட்டி கடைசியாக ஒருதடவை திரும்பிப் பார்த்தான் பாரத வீரன் சிலைபோல் நின்றான். ஓங்கிய ஈட்டி ஓங்கிய நிலையிலேயே இருந்தது.

வண்டியோட்டிக்கிருந்த கடைசி நம்பிக்கை, கடைசி மனித உணர்ச்சி அகன்றது.

கடைசிப் பூட்டகன்றது. கடைசிக் கம்பி விழுந்தது. அது விழுமுன் வண்டியோட்டி கூண்டு முகட்டில் தொத்தி ஏறி விட்டான். குரங்கு மரத்தில் ஏறுவதைவிட, எலி கூரைமீது ஏறுவதைவிட அவன் வேகமாக ஏறினான்.

முகட்டில் நின்றே வண்டியோட்டி ஈட்டியால் கதவைத் திறந்தான்.

அவன் நெஞ்சம் பகீர் என்றது. அடுத்த கணம் என்ன ஆகுமோ என்ற எண்ணம் அவனை அலற வைத்தது.

சீடர்கள் தம்மையறியாமல், "ஐயோ மாரி! ஐயோ” என்று அலறினர். அந்த நேரத்தில் அவர்களிட்ட புதிய பெயர்களை அவர்கள் மறந்தனர்.