பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




178

அப்பாத்துரையம் - 39

அவன் பொறுமையின் எல்லையை அணுகினான்."கோழை சிங்கமே! நீயாக வெளியே வரமாட்டாயா? உன் கோட்டைக் குள்ளேயே வந்து, உன் உயிரைக் குடிக்கிறேன் பார்!" என்று கூறியவண்ணம், அவன் கூண்டை நோக்கி முன்னேறினான்.

தொலைவிலிருந்த சீடர்களும் பட்டிமந்திரியும் இத்தனை யையும் பார்த்தார்கள். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. தங்கள் தங்கள் கண்களையே அவர்கள் நம்ப முடியவில்லை. வண்டியோட்டியின் நிலையும் இதுவே. ஆனால் அவனுக்கு இப்போது ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டது. தன் இக்கட்டான நிலைக்கு அவன் முடிவு காண எண்ணினான். கூண்டு முகட்டில் இருந்தபடியே அவன் பாரத வீரனிடம் பேசினான்.

"ஆண்டே! தாங்கள் வீரர் மட்டுமல்ல. பண்டைத் தமிழ் மரபில் வந்த சுத்த வீரர். பணிந்துவிட்டவரிடம் சுத்த வீரர் எதிர்ப்புக் காட்டமாட்டார்கள். சிங்கம் உங்களிடம் பணிந்து விட்டது. அதை நீங்களே இப்போது பார்த்தீர்கள். அது தன் வணக்கத்தையும் உங்களிடம் தெரிவித்துவிட்டது. சுத்த வீரர்களுக்கு இதற்குமேல் என்ன வேண்டும்? ஆகவே சிங்கத்தை முன்போலவே பாதுகாப்புடன் செல்லவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்றான் அவன்.

பாரத வீரன் முகத்தின் கடுமை சிறிது குறைந்தது. ஆனால் உயர்த்திய ஈட்டியைத் தாழ்த்தாமலே அவன் பேசினான்.

“சிங்கம் வெளியே வந்து பணிவு தெரிவிக்கவில்லையே! அது பணிந்துவிட்டது என்பதை உலகம் எப்படி அறியும்? அதை யார் நம்புவார்கள்?" என்று கேட்டான்.

அவன் தளரா உள்ளுரம் கண்டு, வண்டியோட்டி மலைப்படைந்தான். ஆயினும் அவன் தன்னை சமாளித்துக் கொண்டான்.மீட்டும் கனிவுடன் பேசினான்.

"ஆண்டே, அது இரண்டுகால் சிங்கமாயிருந்தால், நீங்கள் கூறியபடியே வெளிவந்திருக்கும். கெஞ்சி வணக்கம் தெரிவித்திருக்கும். அத்துடன் உங்கள் வீரப்புகழ் பாடியிருக்கும். ஆனால் அது வாய்விடா விலங்காயிற்றே! ஆகையால் தான் அது குறிப்பாய்த் தெரிவித்தது.