182
அப்பாத்துரையம் - 39
பாரத வீரனுக்கு வண்டியோட்டி மீண்டும் மீண்டும் வணக்கம் தெரிவித்தான். வீரர்கள் எறிந்து சென்ற ஈட்டிகள், வாள்கள், வெடிப்படைகள் நிரம்ப இருந்தன. அவை எல்லாவற்றையும் அவன் பாரத வீரனுக்குக் காணிக்கையாகக் கொடுத்தான். ஆனால் பாரத வீரன் அவற்றில் ஒவ் வொன்றிலும் தலைசிறந்த ஒன்றைமட்டுமே தேர்ந்தெடுத்துக் கொண்டான்.
வண்டியோட்டிக்கு இப்போது ஒரு குறைதான் இருந்தது. காவல் வீரர்களில் ஒன்றிருவர் இறந்து விட்டனர். பலர் ஓடி விட்டனர். சில நாட்களாவது சீடர்களில் சிலரை வீரராக அனுப்பும்படி வண்டியோட்டி பாரத வீரனை வேண்டினான். அதற்கான ஊதியம் பெற்றுத் தருவதாகவும் ஏற்றான்.
'ஊதியம்' என்றவுடன் சீடர்களில் மிகப் பலர் முன் வந்தனர். பாரத வீரன் அவர்களில் பத்துப்பேரைத் தேர்ந்தெடுத்து அனுப்பினான்.பழைய வீரர் படைக்கலங்களையே அவர்களுக்கு அளித்தான்.
இச்சமயம் சிங்கம் எக்காரணத்தாலோ மீண்டும் உறுமிற்று. பாரதவீரன் புன்முறுவலுடன் வண்டியோட்டியை நோக்கினான். “சிங்கத்தின் மொழி தெரியும் என்றாயே? அது இப்போது என்ன சொல்கிறது? தமிழில் மொழி பெயர்த்துச் சொல்” என்றான்.
சிங்கம் அப்போது வாயிற்புறத்தில் வாலை வைத்துப் படுத்திருந்தது. அதன் வால் நுனி வெளியே கிடந்தது.
“சிங்கத்தை வென்ற வீரசிங்கம் என்ற விருதுப் பெயரின் சின்னமாக, என் வால் நுனியைக் கத்தரித்து வீரனுக்குக் கொடுங்கள் என்று சிங்கம் கூறுகிறது" என்றான் வண்டியோட்டி.
சொல்லியபடியே அவன் சிங்கத்தின் வால் மயிரின் நுனியைக் கத்தரித்துக் கொடுத்தான்.பாரத வீரன் அதைப் பெரு மிதத்துடன் பெற்றுக்கொண்டான். இளவரசியின் முன்தானைச் சின்னத்துடன் அதையும் தலையணியில் ஒட்டிக் கொண்டான்.
கூண்டு மீண்டும் மங்கம்மாள் சாலை வழியே பயண மாயிற்று. சீடர்களில் சிலர் வீரராக உடன் சென்றார்கள். மீந்த சீடருடன் பாரத வீரன் அணைகரை நோக்கிப் பயணமானான்.