பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(188) ||.

அப்பாத்துரையம் - 39

தண்ணீரிலேயே கிடந்து சிரித்தார்கள். அந்த உருவத்தைக் கண்டுகளிக்கும் ஆர்வத்தால், நெருங்கிச் சென்று யாரும் அவனைக் கரையேற்ற முடியவில்லை. ஆயினும் கழுதையின் வாலை அவன் பிடித்திருப்பது தெரியாமல், சிலர் கழுதையைக் கரையேற்றினர். அதன் வாலைப்பற்றிக்கொண்டு அவனும் பின்வந்ததைக்கண்டு அவர்கள் வியப்புற்றனர். செய்தி விளங்கிய பின்னால், அவர்களுக்கு மீண்டும் நினைத்து நினைத்துச் சிரிக்க வாய்ப்பு ஏற்பட்டது.

பட்டி மந்திரி நிலைக்கு நேர் எதிரான நிலையில் கோவேறு கழுதை இருந்தது. நீரில் பின்னாலிருந்து உதவவருபவர்களை அது எதிர்த்தது. முன்னாலிருந்து இழுப்பவர்களிடமிருந்து அது விலகிச் சென்றது. இதனால் அது நடு நீர்ப்பக்கமே செல்ல வேண்டியதாயிற்று. அதை யாரும் கரையேற்ற முடியவில்லை.

கழுதை கரையேறியும் கோவேறுகழுதை கரையேறாதது கண்டு, பாரத வீரன் முகம் சோர்வுற்றது. "பட்டி மந்திரியின் புகழில் பங்குகொள்ள ஒரு கழுதை இருக்கிறது. என் புகழில் பங்கு கொள்ளத் தக்க கோவேறு கழுதைமட்டும் இல்லாமல் போய் விட்டதே” என்று அவன் முனகிக்கொண்டான். வீரத்தலைவன் சோர்வுகண்டு எப்படியும் கோவேறு கழுதையைக் காப்பாற்றுவது என்று நீலகண்டன் புறப்பட்டான்.

அவன் கோவேறு கழுதை மீது ஒரு கண் வைத்துக் கொண்டே ஆற்றின் கரையோரமாக ஓடினான். சீடர்கள் கவலையுடன் கோவேறு கழுதையையும் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அவனையும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருந்தார்கள். போனவிலங்கு இனி வருவதேது, நீலகண்டன் வீணாகவே தன்னை அலைத்துக் கொள்கிறான் என்று அவர்கள் எண்ணினார்கள். அரைமைல் ஓடும்வரை நீலகண்டன் எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது.

விலங்கும் மனிதனும் மறைந்த பின் சீடர்கள் அவன் வெறுங்கையுடன் வருவதையே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நெடுநேரமாகியும் அவன் கூட வரவில்லை. சீடர்களும் பாரத வீரன் இப்போது கோவேறு கழுதையை மறந்து விட்டனர். அவனுக்காகவே கவலைப்பட்டார்கள். கோவேறு கழுதையைப்