9. கவந்தன் போர்
சிங்கத்தைப் பாரத வீரன் வென்ற சமயம், பட்டிமந்திரி அவனைக் கண்டு நடுநடுங்கிப்போனான். பாரத வீரன் அருகே செல்ல அவனுக்கு அச்சமாயிருந்தது. அவனிடம் பேச அவன் நா எழவில்லை. அவனுடன் எப்படி நாள் கழிக்கப்போகிறோம் என்ற கவலை எழுந்தது. ஆனால் அணைகரை ஆற்றின் நிகழ்ச்சி அவனுக்கு ஊக்கம் அளித்தது. பாரத வீரன் துணிச்சலும் வீரதீரமும் உடையவன் மட்டுமல்ல. மனித உணர்ச்சியும் பாசமும், நட்புறுதியும் பெருந்தன்மையும் உடையவன் என்று கண்டான். அவனிடம் பணி செய்வது ஒரு பெருமை, அதேசமயம், அது மகிழ்ச்சிக்கும் உரியது என்று அவன் கருதினான்.
"கோவேறு கழுதைக்கிருந்த உண்மை உழைப்பிலும் பொறுமையிலும் பாதி எனக்கு இருந்தால் போதும்! அவன் உள்ளத்தில் நான் இடம் பெற்றுவிட முடியும். ஒரு சிறிய அரசாட்சியையும் எளிதில் பெற்றுவிட முடியும்" என்று அவன் தனக்குள்ளே கூறிக்கொண்டான். இந்த எண்ணங்களுடன் அவன் பாரத வீரன் கோவேறு கழுதையைப் பின்பற்றித் தன் கழுதையை நடக்கவிட்டான்.
சீடர்களுக்கு விடை கொடுத்தனுப்பிய பின், அவர்கள் மேற்குத் திசையாக நெடுந்தொலை கடந்தனர். வற்றல் பாலையும் புதர்க்காடும் தாண்டி, செழிப்பான புன்செய்க் காடுகளின் வழியாக அவர்கள் சென்றனர். இளம் புல்லும் ஆவாரையும் கறித்துக்கொண்டு விலங்குகள் கிளர்ச்சிகரமாக நடைபோட்டன. சோளக் கதிர்களிலிருந்தும் கம்பங்கொல்லைகளிலிருந்தும் பறவைகள் கலகலப்புடன் பறந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டேவீரனும் பாங்கனும் களிப்புடன் சென்றனர்.
இருவர் உள்ளங்களும் மகிழ்ச்சி நிரம்பியிருந்தன. அது
இனிய பேச்சாக மலர்ந்தது.