பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

191

குடும்பம், பணம், உணவு, உடைச் செய்திகள் ஆகியவற்றின் சூழலிலிருந்து பாங்கன் உள்ளம் மேலெழுந்து மிதந்தது.புராணக் கற்பனைகளிலிருந்து வீரன் உள்ளம் கீழிறங்கி வந்தது.புன்செய்க் காடுகளின் நறுமணம் இரண்டும் உரையாடலில் பின்னின.

வழியில் ஒவ்வொரு காட்சியும் பாரத வீரன் கண்களுக்குப் பாரத இராமாயணங்களையே நினைவூட்டின.புராணங்களையே நினைவூட்டின. ஒவ்வொன்றையும் அவன் பட்டி மந்திரிக்குச் சுட்டிக் காட்டினான். ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை விளக்கமும் தந்தான்.

அவற்றின்படி, செம்மண் காடுகளெல்லாம், சூரபன்மன் குருதி பரந்தூறிய இடங்கள் ஆயின. சூரனை இக்காடுகளில் கொன்றபின், வேலவன் திருச்செந்தூரிலே சென்று வேலை கடலில் கழுவினான். புதரடர்ந்த மேல்புறக் குன்றுகளெல்லாம், சஞ்சீவி மலையிலிருந்து வரிசையாக விழுந்த துண்டுகள்.

இந்திரசித்தனின் நாகபாசத்தை முறிக்க அனுமன் இவ்வழியாகவே இலங்கைக்குச் சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு சென்றான். நிறமாறும் பச்சோந்திகள், அடிக்கடி உருவம் மாறிய மாய மாரீசன் குருதியிலிருந்து பிறந்தவை.

இத்தகைய கதைகளைப் பட்டிமந்திரி எளிதில் நம்பவும் முடியவில்லை, நம்பாதிருக்கவும் முடியவில்லை. நம்பிக்கை, அவநம்பிக்கை ஆகிய இரண்டுக்கும் இடையேயுள்ள வியப்பார்வ மருட்சி அவன் முகத்தில் துள்ளியாடிற்று.

சீடர்கள் முகத்தில் காணாத கவர்ச்சியைப் பாரதவீரன் இவ்வார்வத்தில் கண்டான். அவனிடம் கதை கூறுவது ஓர் ன்பமாயிருந்தது.

அவன் கேள்விகளும் பாரத வீரன் கற்பனை உள்ளத்தைக் கனிவித்தன.

"ஆண்டே, எல்லாம் அறிந்த தங்களிடம் கேள்வி கேட்க எனக்குத் துணிச்சல் வரவில்லை. ஆனாலும் நான் எழுத்தறி வில்லாதவன். அதை நினைத்துப்பார்த்து, என் சந்தேகங்களைப் போக்க வேண்டுகிறேன்" என்று அவன் தொடங்கினான்.