மருதூர் மாணிக்கம்
211
அவசரத்தில் அவள் எதையும் நினைவில் கொள்ளவில்லை. "பார்த்தீர்களா? இப்போதே மறந்து விட்டீர்கள். அதை முழுவதும் ஒப்புவித்தால்தான் போகலாம். அல்லது உங்களுக்கு எழுதத் தெரியுமா? எழுதிக் கொண்டு போங்கள்” என்றான்.
வேறு வழி காணாமல் பெண்மணி ஒப்பிக்க ஒத்துக் கொண்டாள். எழுதவோ, வாசிக்கவோ தனக்கு வராது என்று ஒத்துக்கொண்டாள்.
பாரத வீரன் தன் பெயர்களை ஓதினான். பள்ளிப் பிள்ளைகள் பாடம் ஒப்பிப்பது போல அவள் பின்னால் சொன்னாள். ஏழு தடவை சொன்ன பின் தான், அவள் தானாக அந்த நீண்ட விருதுப் பெயர்களைச் சொல்ல முடிந்தது.
"வழியெல்லாம் இதை உருப்போட்டுக்கொண்டே போங்கள். உரக்க நான் கேட்க உருப்போட்டுக்கொண்டே போங்கள். நினைவாக இளவரசியிடம் இதை ஒப்பித்துக் கூறுங்கள். வண்டி போகலாம்” என்றான் அவன்.
அவன் காதுகள் குளிர, நெடுந் தொலைவரை பெண்மணி மந்திரப் பாடம் வாசித்தாள். “பாரத வீரன், கண்கண்ட கற்கி, சிங்கத்தை வென்ற வீரசிங்கம், கவந்தனை ஒழித்த காவலன்” என்ற பாட்டுச் சிறிது நேரம் பாரத வீரன், பட்டி மந்திரி ஆகிய இருவர் காதுகளிலும் ஒலித்தது.
பெண்மணி நோயுற்ற தாயைப் பார்க்கச் சென்றது உண்மை. ஆனால் அவள் மணமான பெண்ணுமல்ல. குறுங்குடி மலைத் தலைவன் மகளுமல்ல. அவள் ஒரு கோயில் கணிகை. நோயுற்ற தாயின் அழைப்பினால் அயலூர் செல்லப் புறப்பட்டாள். அத்துடன் இளவரசியைப் பார்ப்பதாகக் கூறிய உறுதியை அவள் காப்பாற்ற எண்ணவேயில்லை. எண்ணி யிருந்தாலும் பயன் ஏற்பட்டிராது.ஏனென்றால் அப்படி ஒரு இளவரசி எந்த ஊரிலும் கிடையாது. ஆனால் அது ஒன்றும் பாரத வீரனுக்குத் தெரியாது.
பாங்கனும் வீரனும் அன்றிரவு முழுவதும் பெண்மணியைப் பற்றியே பேசினர். இறந்தவன் குதிரையைப் பாரத வீரன் கைப்பற்றினான். இறந்தவன் ஆடையணிமணிகளைப் பாங்கன் ஆவலுடன் எடுத்துக் கணக்கிட்டான்.பட்டு ஆடை, மேலாடை, சரிகைப் பட்டுடுப்பு, ஆகியவற்றுடன் வெள்ளியாக மூந்நூறு