1. பொன்வேட்கை
மக்கள் பொன்னுக்குக் கொடுக்கும் உயர்வு வேறு எதற்கும் கொடுப்பதில்லை. பால் வேண்டாப் பூனையும் பழம் வேண்டாக் குரங்கும் இருந்தாலும் இருக்கலாம்; பொன் வேண்டா மனிதன் இருக்கமாட்டான் என்று திண்ணமாகக் கூறலாம்.
அறநூலார் மக்கள் வேட்கைகளை மண், பெண், பொன் என்ற மூன்றனுள் அடக்குவர். ஆனால் மண்ணின் விளைவினுள் சிறந்ததும் பெண்ணின் விழைவுக்கு ஆளானதும்
பொன்னேயாகும்.
தமிழ்ப் பாகவத புராண முடையார்,
'விழைவெ னப்படு கின்றது மென்மெலத்
தழல்வி ரிந்த கனகத் தரும்பிமென்
மழலை மாதர் மருங்கிற் படர்ந்துபைங்
குழவி மீது கொழுந்துவிட் டோங்குமால்.'
என்றனர். விழைவு என்னும் கொடி பொன்னில் வித்தூன்றி அரும்பி,மாதராகிய பந்தரில் படர்ந்து குழந்தைகளாகிய கொழுந்துகள் விட்டு வளருமாம்!
பொன்னை நனவுலகில் பெறாதவர் அதைப்பற்றிக் கனவு காண்கின்றனர். நம் உள்ளத் தடத்தின் உள்ளுறை மறைவுகளை அறிந்த கவிஞர்கள் நனவுலகத்தின் குறைகளைப் போக்கிப் புனைவாற்றலால் தாம் இயற்றிய நிறைவுலகத்திற்குப் பொன்னுலகு என்றுதான் பெயர் கொடுத்தனர். உலகின் நடுவில் அமர்ந்து வெங்கதிரும் தண்கதிரும் தன்னைச் சுற்றிவர நிற்பதாகக் கூறப்படும் தெய்வ மாமலையாகிய மேருவும் ஒரு பொன் மலையே. அதுமட்டுமன்று. அது தன்னை அண்டியவரை யெல்லாம், தன்னை அண்டிய காகத்தைக்கூடப் பொன்மய மாக்கக் கூடிய மலையாம்!