பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12. பொன்முடி

கரதூஷணர் கையில் பட்ட துன்பத்தைப் பட்டிமந்திரி, அறவே மறந்தான். முதலில் அத்தொடர்பு அவனுக்குத் துன்பமாகவே தொடங்கிற்று. ஆனால் அது அவன் வகையில் முழுதும் நன்மையாக முடிந்தது. அவனுக்கென்றும், பாரத வீரனுக்கென்றும் ஆயரும் ஆயர்மகளிரும் வகை வகையான உண்டி, வகை வகையான பொருள்கள் கொண்டுவந்து கொடுத்தனர். அவர்கள் பழம் புகழ் முழுவதும் இதற்குள் அவ்விடம் எட்டி விட்டன. பாரத வீரனைப் பற்றியும் பட்டி மந்திரியைப் பற்றியும் பேசும் ஆர்வம் அவர்களிடையே மிகுதியாயிருந்தது. பாரத வீரனுடன் பேச முடியாததனால், அவர்கள் அவனிடமே சென்று மொய்த்தனர். அவனை அடிக்கடி தம் இல்லத்துக்கு இட்டுச் சென்றனர். பல வீட்டுக்கு ஒரே மருமகப் பிள்ளையாக அவன் நடத்தப்பட்டான்.

பாரத வீரன் உள்நிலை இதற்கு நேர்மாறாயிருந்தது. கரதூஷணர் நேராக அவன்முன் இன்னும் வரவில்லை. ஆனால் மாயத்தாலேயே அவனைத் திணறடித்திருந்தனர். பட்டி மந்திரியைத் தம் வலைக்குள் போட்டுக் கொண்டு, நட்பு நடிப்பால் அவர்கள் தன்னை இன்னும் வெல்ல நினைக்கின்றனர். இந்த எண்ணம் ஆயரின் நேயத்தை மாயமாக்கி, அவன் உள்ளக் கிளர்ச்சியைக் கெடுத்தது. அவன் அவ்விடம் விட்டுப் போகும் நாளை எதிர்பார்த்தான். ஆனால் இப்போது பட்டி மந்திரி அவன் சோர்வை அகற்றத் தன்னாலியன்ற மட்டும் முயன்றான். “நிழலை யடுத்து வெயிலும், வெயிலை யடுத்து நிழலும் வருவது இயற்கைதான், வெற்றி நம்மை விரைவில் அடுத்து வருவது உறுதி. என்னைச் சிற்றரசனாக்கி, நீங்கள் பேரரசனாகும் நாள் தொலைவில் இல்லை” என்று அவன் ஊக்குரைகள் கூறினான்.