பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

237

உங்களிடம் மனுதாரராகவே இருக்கிறோம். முன்பு உங்கள் தயவை ஒரு நாள் எங்களுக்கு வாங்கித் தந்த பட்டி மந்திரியை இதுவகையிலும் பயன்படுத்திக் கொள்ள எண்ணுகிறோம். உண்மையில் எங்கள் வீரப்பணியை நீங்கள் செய்தபின், அதற்காக எங்கள் சார்பில் அவருக்காக ஒரு சிற்றரசையும் தர எண்ணியிருக்கிறோம்” என்றான்.

பாரத வீரன் நிமிர்ந்திருந்தான். 'வீரப்பணி' என்ற சொல் உலாவின் உயிர்ப்பை அரண்மனைக்குள்ளும் கொண்டு வந்திருந்தது. பட்டி மந்திரிக்கோ தலை சுழலத் தொடங்கிற்று. அவன் ஆவலுடன் சிற்றரசுப் பதவியைக் கனவு கண்டிருந்தான். இப்போது கனவாகவே அது அவன் முன் வந்து ஆடிற்று. ஆனால் அந்த நனவு அவனைக் கனவு மண்டலத்திற்கே அனுப்பி அதில் சுழல வைத்தது.

பாரத வீரன் வணக்கம் செய்தான். "பால் குடிப்பது பூனைக்கு ஒரு தொழிலல்ல அரசே! பழந்தின்பதற்குக் குரங்குக்குக் கூலியா வேண்டும். அதுபோலவே வீரப்பணி செய்ய எனக்குத் தூண்டுதல் எதுவுமே தேவையில்லை. ஆனால் உங்களுக்கு அதனால் என் அன்பையும் மதிப்பையும் காட்ட ஒரு வாய்ப்புக் கிடைத்தது பற்றி மகிழ்கிறேன். எனக்கு இதுவரை மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் உண்மை தவறாமல் நடந்து கொண்ட பாங்கன் பட்டி மந்திரி. அவன் வாழ்க்கையின் ஆர்வத்தையும் தாங்கள் இதனாலேயே நிறைவேற்றத் திருவுளம் கொண்டிருக்கிறீர்கள். ஆகவே தங்கள் வீரப்பணி எதுவானாலும் கூறுக. அதற்காக என் உடல் பொருள் ஆவி மூன்றையும் ஒப்படைக்கக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

"வெற்றி வெற்றி, பாரத வீரனுக்கு மும்முறை வெற்றி! வெற்றி, மேதை பட்டி மந்திரிக்கு மும்முறை வெற்றி”

என்ற குரல்கள் அவையோரிடையேயிருந்து எழுந்தன. வேண்டுகோள் அரசன் அரசி வேண்டுகோள் மட்டுமல்ல; நாட்டு மக்கள் அனைவரின் வேண்டுகோள் என்பதை இது விளக்கிக் காட்டிற்று.

அரசன் அரசியை நோக்கினான். அரசி பேசினாள்.