(264
அப்பாத்துரையம் - 39
பாரத வீரன் ஒன்றும் தோன்றாமல் தயங்கினான்.
நன்னயப்பட்டர் அவர்களைப் பேசவிடவில்லை."இவர்கள் இப்பக்கம் சென்ற பிரயாணிகள். சான்றாளர்களாக முன்பே அவர்களைத் திட்டம் செய்திருக்கிறேன். அவர்கள் முன் என் உறுதிமொழி நிறைவேற்று" என்றான்.
பாரத வீரனுக்கு உண்மையில் எதுவும் தோன்றவில்லை. ஆனால் உறுதிப்படி, அவன் செயலில் முனைந்தான். அவன் வாளின் ஒரு வீச்சிலேயே பெட்டி உடைந்தது. ஆனால் உள்ளிருந்த ஏடுகளைக் கண்டதுமே அவன் திடுக்கிட்டான். ஒரு வேளை நன்னயப்பட்டர் தன் ஏடுகளையும் நூலகத்தையும் கொண்டு சென்ற பூதமோ, அல்லது அதன் ஆளோ என்று மலைத்தான். ஆனால் எப்படியும் அந்த ஏடுகளைக் கிழிக்க அவன் மனம் ஒப்பவில்லை.
அவன் உலா, நிறுத்த ஒத்துக்கொண்டான்.நன்னயப் பட்டர் சொற்படி நடக்க இசைவளித்தான்.
நன்னயப்பட்டர் உடனே தம் கவசமும் தலையணியும் நீத்து, தம் உருவில் அவன் முன் நின்றார்.
பாரத வீரன் தோற்றம் எண்சாணும் ஒரு சாணாகக் குன்றிற்று. அவன் முகம் ஒரு நொடியில் விளறிற்று. நன்னயப்பட்டர் என்னவோ, ஏதோ என்று அஞ்சினார். பாரத வீரன் கீழே சாய இருந்தான். கோமாறன் சட்டென வந்து தாங்கினான். செல்லாயி “ஐயோ, கண்மணி! நான் உன்னைக் கூட்டிவரப் பட்டபாட்டின் பயன் இதுவா? உன் தோல்வியை எங்களுக்காக மறந்து விடு. வா வீட்டுக்குப் போவோம்” என்றாள்.
செங்காவியும், "மாமா? நாங்கள் செய்த சூழ்ச்சி அன்பு காரணமானதுதான். எங்களை மன்னித்துவிடுங்கள்! எங்களுக்கு நல்வாழ்வளியுங்கள்” என்று குழைந்தாள்.
பாரத வீரன் உருவுடன் குணமும் சட்டென மாறியதுபோல் காணப்பட்டது. அவனால் எழுந்திருக்க முடியவில்லை. உடலின் ஊக்கம் தளர்ந்தது. ஆனால் அவன் முகம் வலியப் புன்முறுவலை வருவித்துக்கொண்டது.