16. மங்கல வாழ்வு
பாரத வீரன் வள்ளன்மை கேட்டு, பட்டி மந்திரியின் மனைவி மக்கள் ஓடோடி வந்தனர். ஆனால் அவன் உடல் நிலை கண்டு கலங்கினர்.
"ஐயனே! உம் பெருமையை அறியாமல், நாங்கள் என்னென்னவோ கூறினோம். வீரகவசத்துக்குள்ளே இவ்வளவு அன்புக்கனிவுடைய உள்ளம் இருந்ததென்பதை இப்போதுதான் உணர்ந்தோம். தாங்கள் நீடுழி வாழ வேண்டும். உங்கள் உடலை எங்கள் உடலாகப் பேணிக் காக்க விரும்புகிறோம். உங்கள் நலனே இனி எங்கள் நலன்" என்றனர்.
பாரத வீரன் புன்முறுவல் பூத்தான்.
“எனக்கும் இப்போது புதிய பாதை தோன்றியிருக்கிறது. அம்மணி! நான் புகழ் தேடி அலைந்தேன். உங்கள் பொன்னார் அன்பு அதைவிட எவ்வளவோ பெரிது என்பதை உணர்ந்தேன்” என்றான்.
பட்டி மந்திரி இப்போது தானாக இளவரசியின் சாபத்தை நினைவூட்டினான். அதை நீக்கத் தான் பத்தாயிரம் அல்லது நூறாயிரம் அடிகளை மனமுவந்து ஏற்றுக் கொள்வதாக உறுதி கூறினான்.
பாரத வீரன் முகத்தில் சற்றே களை வந்தது. ஆயினும் முந்திய முழு மகிழ்ச்சி முகத்திலில்லை.மணிப்புலவன் இப்போது இதைக் கவனித்தான். நாடக வாழ்வுக்கு ஒரு முடிவுகாண இதுதான் தக்க சமயம் என்று அவன் எண்ணினான்.
அவன் பாரத வீரன் முன் வந்து வணங்கி நின்றான். “அண்ணலே! தங்கள் வாழ்வு உண்மையிலேயே புது வாழ்வாக மலர வேண்டுமென்று எண்ணுகிறேன். அதற்கு முன், நான்