12
அப்பாத்துரையம் - 39
ஆனால், கலப்பு வேறு, சேர்மானம் வேறு. (Mixture & Compound) கலந்த பொருள்களை வேறு பிரிப்பது எளிது. அவற்றின் தனிப்பண்புகள் மாறுவதில்லை. ஆனால் சேர்மானமாய்விட்டால் பண்பும் தோற்றமும் எல்லாம் மாறித் திரியும். திரிந்த அப்பொருள்களை மிகவும் கடு முயற்சியின்றி மீட்டெடுத்தல் எளிதில் இயலாது. தங்கம் வெள்ளிகளின் தனிச் சிறப்புக்களுள் ஒன்று அவை எளிதில் பிற பொருள்களுடன் சேராதிருப்பதே. சிறப்பாக மற்ற எல்லாத் திண்பொருள்களும் நீரகங்களுக்கு (Acid) இடைந்துபோகுந் தன்மை உடையவை. வெள்ளிகூடக் கந்தரக நீரகம், வெடியுப்பு நீரகம் (Sulphuric Acid, Nitric Acid) ஆகிய வற்றுடன் கலந்து திரியும். ஆனால் பொன் ஒன்று பெரும்பாலும் நீரகங்களுடன் சேர்ந்து திரிவதில்லை. இப் பண்பைப் பயன்படுத்தித்தான் மக்கள் பொன் கலவையிலிருந்து பொன்னை எளிதில் பிரித்தெடுக்கின்றனர். பொன்னுடன் எளிதில் சேரும் பொருள்கள் அரசநீரம் (Apua Regia) என்ற கலவை நீரகமும், பாதரஸமும், ஸயானைடு என்ற பொருளுமே. அரச நீரகம் என்பது செறிவுமிக்க வெடியுப்பு நீரகம் (Nitric Acid) ஒரு பங்கும், செறிவுள்ள நீர்க்கால் பாசக நீரகம் (Hydrochloric Acid) மூன்று பங்கும் சேர்ந்தது. மற்றும் உயர் வெப்பநிலையுடைய வேறு (Selenic Acid, Telluric Acid) ஆகிய இரு நீரகங்களிலும் தங்கம் கரையும். அரச நீரகத்துடன் கலந்த பொன் “பொன் நீர்” என்று வழங்குகிறது. பொன் பூச்சுக்கு இது மிகவும் பயன்படுகிறது.
இங்ஙனம் பொன் இயற்கையின் பரப்பிலுள்ள பொருள் களுடன் எளிதில் கலவாதிருப்பதனால்தான் அது அழியாச் செல்வமாகப் போற்றப் படுகிறது. எகிப்திய அரசர் கல்லறை களிலுள்ள பொன் அணிகளும், பொன் ஆடைகளும் 7000 அல்லது 8000 ஆண்டுகள் கல்லறைகளுக்குள்ளிருந்தும் அழியாதும் நிறம் கெடாதும் இருக்கின்றன. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் 'லுதீன்' என்ற கப்பல் ஹாலந்துக் கடற்கரை யருகில் மூழ்கிற்றாம். அதையும் அதிலிருந்த பாரிய பொற்குவையையும் அண்மையில் வெளியில் எடுத்தார்கள். அப்போது அத்தங்கத்தின் பண்பைக்கண்டு யாவரும் வியந்தன ராம்.150 ஆண்டுகள் உப்பு நீரில் கிடந்த வேறு எப்பொருள்தான், அன்று உருக்கி வார்த்தடித்தது போலிருக்கக் கூடும்?