பொன்னின் தேட்டம்
23
பட்டிருந்தன. இரண்டினிடையேயும் விலை வேற்றுமை ஏற்பட்டபோது அரசினரிடையிலும் வாணிப உலகினிடையிலும் பல குழப்பங்கள் ஏற்படத் தொடங்கின. ஆகவே 1816-இல் இங்கிலாந்தில் பொன் வெள்ளி இணைப்பளவை (Joint Standard of Gold&-Silver) கைவிடப் பட்டு, பொன்னே தனி மதிப்பளவையாக (Single Standard) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இங்கிலாந்தைப் பின் பற்றி ஒவ்வொரு நாடாக எல்லா நாடுகளும் 19-ஆம் நூற்றாண்டிற்குள் தங்க அளவையை ஏற்றுக் கொண்டு விட்டன. உலக முதற்போரினால் ஏற்பட்ட பொருள்முடையினாலும் அதன் பயனாக உலக முழுமையிலும் ஏற்பட்ட 1930-ஆம் ஆண்டின் செல்வச் சீரழிவினாலும் ஒவ்வொரு நாடாக யாவும் பொன் மதிப்பளவையைத் துறந்தன. இறுதியில் 1930-இல் இங்கிலாந்தும் துறந்தது. பின்பு, படிப்படியாக எல்லா நாடுகளும் முடை தீர்ந்தபின்,பொன் மதிப்பை மீண்டும் ஏற்றுக்கொண்டன.
தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் வெள்ளிக் காசுக்கே இடமின்றி அக்காலத்தில் எங்குந் தங்கக் காசுகள் வழங்கப்பட்டதொன்றே, இந்நாட்டில் உயர்தர வாணிபத்திற்கு- அஃதாவது உலக வாணிபத்திற்குத் தங்க மதிப்பளவை அக் காலத்தில் ஏற்பட்டிருந்தது என்பதைக் காட்டும். அக்காலத்தில் பிறநாடுகள் பலவற்றுடன் தமிழ்நாடு வாணிப உறவு வைத்திருந்த போதிலும் அவையெல்லாவற்றினிடமிருந்தும் இந்நாடு பொன் காசன்றி வேறு காசு பெறாதது குறிப்பிடத்தக்கது.எனவே அன்று அக்காசுகள் இந்நாட்டில் காசு மதிப்பினை ஒட்டிப் பெறப்படவில்லை, பொன் மதிப்பை ஒட்டியே பெறப்பட்டன என்று எண்ணல் தகும். மேலும் பொன் புடமிடல், பொன் மாற்றுக் கணித்தல், பணம் கொடுக்கல் வாங்கலை மிகுதிப்படுத்தும்படி வட்டித் தொழில் நடாத்தல் ஆகிய எல்லா வாணிபத் துறைகளிலும் நம் நாட்டினர் பிறநாடுகளினும் சிறந்திருந்தனர் என்பதற்கு வரலாறு சான்று பகரும்.