32
அப்பாத்துரையம் - 39
வகை யாது என்ற கேள்வி எழலாம். இதற்கு முடிந்த மறுமொழி கூறும் நாள் வரவில்லையெனினும் ஒருவாறாக விளக்கஞ் செய்துள்ளனர் அறிவியலின் முன்னணியில் நின்று வரும் பொருள் நுனித்துணரும் மெய்யறிஞர்கள்.
மண்ணுலகின் வெளிப்புறத்தைப் போல் திண்ணமாயிராது நடுப்புறம் பெரு வெப்பத்தாலுருகிய நிலையிலுள்ளது. காற்றுச் சூழலால் (வாயு மண்டலம்) தட்பமெய்திய வெளிப்புறத்தோடு வறண்ட நிலம் வெடிப்பது போல் வெடிக்கிறது. இவ் வெடிப்புக்கள் வழியாக உள்ளே கொதித்தெழும் குழம்பிலிருந்து பல பொருள்கள் ஆவியாக வெளிவருகின்றன. வெடிப்புக்களின் பக்கங்களிற் பட்டு இவையும் தட்பமடைந்து நாளடைவில் வெடிப்பை அடைக்கின்றன. இங்ஙனம் வெடிப்புகளில் வந்தடைத்த பகுதிகளே தாய்ப்பாறைகள். மண்ணுலகின் மேற்புறத்தை விட உட்புறத்தில் மிகுதியாகப் பொன் முதலிய திண்பொருள்கள் உருகிய நிலையிலும் ஆவியாகவும் கலந்திருப்ப தனால் இத் தாய்ப்பாறைகளிலும் அவை மிகுதியாயுள்ளன.
ப
உலகின் உள்ளிடம் பொன் கலப்பு மிகுதியுடையது என்பது உலகின் பரப்பில் நடுவிடமாகிய மேரு பொன் மயமானது என்ற முன்னோர் புனைவை மீண்டும் நினைவூட்டுகின்றது.
உலகில் மேல்மண், நிலத்தினுள் காணும் குழம்பின் காய்வே யென்பதும், அக் குழம்பு ஒரு காலத்தில் ஞாயிற்றின் பகுதியாயிருந்து பிரிவுற்றதென்றும், ஞாயிறும் பிற விண் மீனினங்களும் அகன்ற இயற்கை வெளியில் உள்ள “வான் (Ethe) என்ற ஒரே பொருளின் திரிபென்றும் அறிவியல் (Science) கடலினுக்கும் அப்பால் அறிவுக் கண் செலுத்திய மெய் விளக்கத்தார் (philosophers) கூறுகின்றனர். எனவே மற்றெல்லாப் பொருள்களையும் போலவே இயற்கை வெளியில் கலந்திருந்து பின் ஞாயிற்றையும் நிலத்தின் உட்பிழம்பையும் கடந்து புற நிலத்தினூடாக வெளிவந்து அங்ஙனம் வெளிவரும் வழியில் தங்கிய தங்கற் பகுதியே இன்று நமக்குத் தங்கமாக வந்து தங்கிய செல்வமாயிற்று என்னலாம்.