பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொன்னின் தேட்டம்

35

அளவில் பல இடங்களில் பொன் காணப்படுவதாக அவர்கள் குறித்திருக்கின்றனர். வையையாற்று மணலில் பல இடங்களிலும் பொன் கலப்பு உள்ளது; பழகமுத்து (Palakamuthu) என்று குறிப்பிடப்பட்ட இடத்தில் இது சற்று மிகுதியாகக் காணப் பட்டதாம். இன்னும் சேலம் வட்டத்தில் சிற்றாறுகளிலும் கஞ்சமல்லிய (Kanjah Mallia) மலையடி வாரங்களிலும், மலையாளத்தில் நீலாம்பூரிலும் வயநாட்டிலும், பெய்ப்பூர் (Beypoor), ஆற்றின் கரையிலும், திருவாங்கூரிலும் பெல்லாரியிலும் தங்கம் இருக்கக்கூடும் என்று தெரிகிறது. வடநாட்டிலும் துங்கபத்திரைக் கரையிலும் விந்தியமலையை ஒட்டிய கோண்டவனப்பகுதியிலும் பொன் கிடைத்தல்கூடும் என்று கருதப்படுகிறது. ஆயினும் இவை பேரளவில் இருப்பதாகத் தெரியவில்லை. நாட்டுப்பற்று மிக்கவர் அதில் முனைந்து முயலவும் இல்லை. எப்படியும் வாணிப அளவில் இன்று இந்தியாவில் மைசூரிலும், விந்தியமலையின் கீழ்ப்பகுதியிலும் பொன் எடுக்கப்படுகிறது.

சுரங்கங்களுள் பழங்காலச் சுரங்கங்கள் பெரும்பாலும் மண்ணில் (மருதப்பகுதியில்) வெட்டியெடுக்கப்பட்டவையே. கரும்பாறைகளைத் தகர்த்துப் பொடியாக்கவோ மலைக்குள்ளும் நிலத்தினுள்ளும் நெடுந் தொலை செல்லவோ உதவும் புதிய பொறிகள் அக்காலத்தில் இல்லை. நிலத்தின் ஆழத்திற் சென்று பொன் இருக்கும் பாறைகளின் கிடக்கையைப் பின்பற்றி உள்ளீடான சுருங்கை வழிகள் அமைப்பதும் அக்காலத்தில் மிகுதி கிடையாது. (நம் நாட்டில் கோட்டைகளில் சுருங்கைகள் உள்ளன. ஓரளவு புதுப்பொறிகள் வருமுன்னமே நம்நாடு தொழிலில் முதன்மையுடையதா யிருந்ததென்பதை மக்கள் பெரிதும் மறந்து விடுகின்றார்கள்.)

பழம்பொருள் ஆராய்ச்சியின் பயனாகத் தமிழ் நாட்டில் உலகின் பிற்கால அறிவியல் நிலைக்குப் பல வகையிலும் ஒப்பானதும் சில வகையில் உயர்வானதுமான நாகரிகம் ஆரியர் வரவுக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்ததென்று படிப்படியாக விளங்கி வருகின்றது. அதனால் விளங்கவேண்டும் பல உண்மைகளில் அந்நாளைய தமிழர் பொன்னை வெட்டிய வகையின் வரலாறும் ஒன்று.