பொன்னின் தேட்டம்
37
இறங்கி மண்ணை வெட்டி மேலே கொண்டு வருவர். மண்ணிறைந்த கூடைகளைக் கிணற்றிலிருந்து இறைப்பதுபோல் கயிறிட்டும் ஏற்றமிட்டும் இறைப்பர். குழியின் நாற்புறமும் நன்கு கட்டப்பட்டு உறுதியான விட்டம் இட்டால் பெரிய கூடைகளும் வன்மையான கயிறு மிட்டு மிகுதி மண்ணெடுப்பதுடன் மண் வெட்டுபவர்களும் அதில் இருந்து கொண்டே குழியினுள் இறங்கவும் ஏறவும் செய்வர். ஆனால் எவ்வளவு திறம்பட ஏற்பாடுகளைச் செய்தாலும் இப்பொற்குழிகள் அல்லது சிறு சுரங்கங்கள் மிகவும் ஆழம் செல்ல முடியாது. நிலத்தினுள் சுரக்கும் நீரை இறைக்கும் தொந்தரவு ஒரு புறம், சுற்றுமுள்ள சுவர்களின் மென்மை ஒரு புறம், உட்செல்லச் செல்லக் காற்றும் ஒளியும் இன்றிப் புழுக்கம் மிகுந்து வேலைக்காரர் வேலைசெய்ய முடியாத நிலை ஒருபுறம், ஆக எல்லாம் சேர்ந்து சுரங்கங்களின் வேலை மிகுதி ஆழம் செல்லாமல் தடுத்து வந்தது; நிலத்தின் போக்கு இது. கடும்பாறைகள் உள்ள இடத்தில் கேட்கவேண்டிய தில்லை. அவற்றை வெறும் மண்வெட்டியாலோ கடப்பாறை யாலோ பிளக்க முடியாத காரணத்தால் அப்பாறைகளில் பொன்னிருக்கிறதா என்று ஆராயக்கூட வகையின்றி யிருந்தனர் அந்நாளைய மக்கள்.
மண்ணிலுள்ள பொன், ஆற்றில் கரைந்து வந்த பொன் பொடியே யாதலால் அது விரைவில் அற்றுவிடும். தமிழ் நாட்டில் முற்காலத்தில் மிகுந்த பொன் விளைந்து பின் அருகியதன் மறைபொருள் இதுவே. முற்காலத்தில் பொன் எடுத்தது பாறையிலிருந்தன்று; மண்ணிலிருந்தே. அதில் தமிழ்ப் பொன்தேட்டாளரும் வணிகரும் முயன்று அவ்வூற்று அற்றுப் போகும்படி செய்திருப்பர். புதிய முறையிற் பாறைகளைத் தகர்க்கும் முயற்சியில் யாரும் முனையாததனால் பழைய சுரங்கத் தொழில் இந்நாட்டில் அழிந்துவிட்டது.
இந்தியாவில் பன்னிரண்டாம் நூற்றாண்டினுக்குள் வெடி மருந்தின் வழக்கு ஏற்பட்டுவிட்டது. அதன் முன்னமேகூட வெடிமருந்து இந்நாட்டில் இருந்திருக்கலாம். சீனநாட்டிலேயே இது முதல் முதல் வழங்கியதென்று மேல்நாட்டு ஆராய்ச்சி யாளர் கூறுவர். ஐரோப்பாக் கண்டத்திற்கு இதன் வழக்கு 16-ஆம் நூற்றாண்டிலேயே சென்றது. நம்நாட்டில் மலைகளில்