7. பொன் தேட்டம்
எப்பொருளும் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் அதற்கு முழு மதிப்பும் பயனும். மக்கள் செல்ல முடியா அடர்ந்த காட்டிலும், பாலை வனத்திலும் கடல் சூழ்ந்த சூழகத்திலும் (தீவிலும்) பூத்த பூவினை எடுத்து மகிழ்பவர் யார்? அதுபோல் பொன் கிட்டுமிடம் மக்கள் வாணிப வாழ்வின் ஒழுக்கினின்று விலகுந்தோறும் அதன் முழு மதிப்பையும் நாம் பெற முடியாமல் போகிறது. சில விடங்களில் பொன்னைப் பிரித்தெடுக்க ஏற்படும் கடுமுயற்சியினாலும் செலவினாலும் கூட அது மதிப்பற்றுப் போய்விடுகிறது. ஆனால் மாந்தர் அறிவியல் புதுப்புனைவுகளின் பயனாகப் பல புத்தம் புதுக் கருவிகளும் முறைகளும் ஏற்பட்டு எதிர்பாராத தடைகளையும் நீக்கி விடுகின்றன. எடுத்துக் காட்டாகத் தென் ஆப்பிரிக்க இராந்துச் சுரங்கத்தில் பொன் கலவையளவு மட்டாகவும், ஆழமிகுந்த அடிப்புறத்தில் கடுமையான பாறைகளில் கலந்தும் இருப்பதனால் தற்காலப் புதுப்புனைவுகளில்லையானால் அவை பயன் பெறாமலேயே போயிருக்கும். கனடாவிலுள்ள கிளான்டைச் சுரங்கம் குளிர் மிகுந்து மனிதர் எளிதில் வந்து வாழ முடியாத இடத்தில் இருப்பதால் மின்வன்மை முதலிய தற்கால நாகரிக வாய்ப்புகள் ஏற்படுவதற்கு முன்னால் கண்டு பிடிக்கப்பட்டிருந்தாலும் கூடப் பயன்படாமலேயே இருந்திருக்கும். ஆசியாவில் வட ஸைபீரியா விலுள்ள லீனா ஆற்றங்கரைச் சுரங்கங்களிலிருந்து தங்கத்தைக் கொண்டுவருபவர் வழியில் திருடர் அச்சத்தினால் கையில் துப்பாக்கியுடனும் படைபடையாய்த் திரண்டும் வருவராம்.
நாகரிக மிக்க இந்நாளிலும்கூட அண்மைவரை கீழ் ஆப்பிரிக்காவிலும் நியூகினியிலும் உள்ள சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுத்த தங்கத்தைக் கொண்டு வரவோ, வெட்டி யெடுக்கும் தொழிலாளருக்கு உணவு முதலிய பொருள்கள்