பொன்னின் தேட்டம்
53
பொருளாய் வழங்குகிறது. அவற்றில் சிலவற்றை இரண்டாம் பிரிவில் கூறியுள்ளோம். சுருக்கமாகக் கூறின், அவையே பொன்னின் அழியாமை, நேரடியாகப் பயன்பட்டு விடாமை, அருமை ஆகிய குணங்களாலேயே அது நின்று நிலவுகிறது.
இரண்டாவது கருத்து பொன், மக்கள் கணக்கீட்டுக் குறிப்பு மட்டுமே; வேறு அதற்குத் தனி மதிப்பில்லை என்பதுதான். மதிப்பீட்டுப் பொருள்கள் தமக்கென மதிப்புடையவை அல்ல; பிற பொருள்களின் விலையை அளக்கும் கருவிமட்டும்தான் என்று இவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால், இது முற்றிலும் உண்மையல்ல; பாலளக்கும் நாழியும் துணியளக்கும் முழமும், வெல்லத்தை நிறுத்துப் பார்க்க உதவும் எடையும் பாலாகவோ துணியாகவோ வெல்லமாகவோ ஆக மாட்டாவாயினும் விலையற்றவை ஆகா. அதுபோலப் பொன்னும் பிறபொருள்களை அளப்பதால் அப்பொருள்களை நோக்க மதிப்பற்றதாகத் தோன்றினும் உண்மையில் நிலவரமான மதிப்புடையதே யாகும். அதுமட்டுமன்று; உலகில் பொன்விளைவு மிகுந்தோறும் அதன் விலை குறையும்; விலையில் குறைவு ஏற்படுந்தோறும் விளைவு மிகும்; ஆனால் இவற்றால் அதன் மதிப்பீட்டு விலை அவ்வளவாக மாறுவதில்லை. இங்கிலாந்தில் பொன் மதிப்பளவையாக இருக்கும்போது பொன்னுக்குக் கட்டுப்பாடான விலை இருந்தது. அதன் மூலம் அது தாள் நாணயத்துடன் கட்டுப்பட்டிருந்தது. அக் கட்டுப்பாடு நீங்கினபின் தாள் நாணயம் பெயரளவில் நாணயமாய் பொன்னே உண்மை நாணயமாயிருந்து வருகிறது. கொடுக்கல் வாங்கல் வாய்ப்புக்குத் தாள் எவ்வளவு எளிதா யிருந்தபோதிலும் முக்காலத்திற்கும் எல்லா இடத்துக்கும் அது பொருத்தமான தாகாது; ஏனெனில் அது ஒரு அரசியலார் அல்லது ஒரு கூட்டத்தாரின் மதிப்பைப் பொறுத்ததேயன்றி அத்தாளையே நேரடியாகப் பொறுத்ததன்று.பொன் அங்ஙனம ல்லாததால் நாட்டெல்லை கடந்து உலக முழுமைக்கும், கால எல்லை கடந்து எக்காலத்துக்கும் அது மக்கள் பொருளாதார உறவின் பொது இணைப்பாயிருந்து வந்திருக்கிறது; அங்ஙனமே இன்னும் இருந்து வருகிறது. அங்ஙனமே இனிமேலும் இருந்துவரும் என்று அவர்கள் கூறினர்.