மன்பதைக் கதைகள்
61
தோட்டத்தை மேன்மேலும் உன்னிப்பாகக் காவல்காத்து வந்தான். ஞிமிலி கீரையை மூட்டை கட்டிக்கொண்டு மதிலேறப் போகும் சமயம் அவனை மாயக்காரன் கையும் மெய்யுமாகப் பிடித்துவிட்டான். ஆகா, மதிலேறி வந்து திருட உனக்கு என்ன துணிச்சல்? இதோ, உன் தலையை அந்தக் கீரைக்கு உரமாக்கி விடுகிறேன், பார்!' என்று அவன் தன் இடுப்பில் செருகியிருந்த வாளை உருவினான்.
வணிகன் ஒரு கணம் பொறி கலங்கியபடி நின்றான்.ஆனால் கீரையுணவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனைவியின் உருவம், அவள் வயிற்றிலுள்ள இளங்கரு ஆகியவை அவன் மனக்கண் முன் தோன்றின. அவன் மாயக்காரன் காலடியில் விழுந்து அதைக் கட்டியாகப் பற்றிக் கொண்டு கோவென்றழுதான். 'நான் எனக்காகவோ, திருடிப் பிழைப்பதற்காகவோ இப்படிச் செய்யவில்லை. விலைகொடுத்தால் கூட அகத்திக்கீரை எங்கும் கிடைக்கவில்லை. கருவுற்ற என் மனைவி அதன் ஆவல் தீராவிட்டால் இறந்துவிடுவது உறுதி. இந்த இக்கட்டில்தான் இது யாருடையது என்று தெரியாமல் மதிலேறிப் பறிக்க நேர்ந்தது. பறித்த கீரைக்கும் இனிப்பறிக்கப்போகும் கீரைக்கும் என்ன விலை கூறினாலும் தருகிறேன். பெரிய மனது வைத்து, என் மனைவி குழந்தையை எண்ணியாகிலும் என்னைக் காப்பாற்ற வேண்டுகிறேன்” என்று மன்றாடினான்.
மாயக்காரன் மனம் சிறிது இரங்குவதுபோலத் தெரிந்தது. அவன் வாளை உறையில் இட்டான். "நான் உன்னைக் கொல்லாமல் விடவேண்டுமானால், அதற்கு ஒரே வழிதான் உண்டு. உனக்கு வேண்டுமளவு கீரையை எப்போதும் பறித்துக் கொள்ளலாம். ஆனால் உன் மனைவிக்குக் குழந்தை பிறந்தவுடன், குழந்தையை நீ என்னிடம் தந்து விட வேண்டும்” என்றான்.
தலைக்கு வந்த இடர் தலை முடியுடன் போயிற்றென்றே வணிகன் கருதினான். மனைவியைப் பற்றிய கவலையில் பிறக்க இருக்கும் குழந்தையைப் பற்றி அவன் மிகுதியாக எண்ணவில்லை. மாயக்காரன் கேட்டபடியே வாக்களித்துவிட்டுச் சென்றான். நடந்த செய்திகளைக் கேட்டபோது ஆதிரை திடுக்கிட்டாள். ஆனால் சிறிது அமைந்து சிந்தித்துப் பார்த்தபின், கணவன் உயிர்தப்பியதே பெரிது என்று அவள் ஆறுதலடைந்தாள்.