பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

அப்பாத்துரையம் - 39

முயற்சியில் ஈடுபட்டுக் காட்டில் அலைந்து திரிந்தான். மார்கழி சிறைப்பட்டிருந்த காட்டில் நெடுநேரம் வேட்டையாடிய அலுப்பால் அவன் தோட்டத்தினருகே வந்து தங்கினான். வழக்கப்படி மாயக்காரன் மார்கழியைக் காணவந்தான். இளவரசன் அருகே இருப்பதை அவன் கவனிக்கவில்லை. ஆனால் இளவரசன் அவன் வந்ததைக் கண்டு கொண்டான். அந்த நடுக்காட்டில் அவனுக்கென்ன வேலை என்பதைக் காணும் ஆவலுடன் அவனையே நோக்கியிருந்தான்.

காட்டில் தோட்டம் இருப்பதே வியப்புக்குரியதென்று மானேந்தி எண்ணினான். தோட்டத்தினருகே கோபுரம் இருப்பதை முதலில் அவன் காணவில்லை. கோபுரத்தினருகே சென்று 'மார்கழி, மார்கழி!' என்று மாயக்காரன் அழைத் ததையும், அதன்பின் நிகழ்ந்த விசித்திர நிகழ்ச்சிகளையும் அவன் கண்டு வியப்படைந்தான். கூந்தலின் நீளத்திலிருந்தும், பளபளப்பிலிருந்தும் உள்ளே ஓர் அழகரசிதான் இருக்க வேண்டும், அவள் பேர் தான் மார்கழியாய் இருக்க வேண்டும் என்று அவன் ஊகித்தான். மாயக்காரன் கூந்தலேணி பிடித்துக் கீழே இறங்கிச் சென்றபின் அவன் அங்கேயே நீண்டநேரம் தங்கினான்.

நாள்தோறும் மாயக்காரன் மாலையில் வருவதும் இரவே போய் விடுவதும் இரண்டொரு நாட்களில் மானேந்திக்குப் புரிந்துவிட்டது.அவன் மூன்றாம் நாள் காலையில் துணிச்சலாகக் கோபுரத்தருகே சென்றான். மாயக்காரன் கூப்பிட்டபடியே 'மார்கழி, மார்கழி' என்று கூப்பிட்டான். அவன் இளைஞ னாதலால், மாயக்காரனைவிட மிக எளிதாகக் கோபுரத்துக்குள் சென்றான்.

மாயக்காரனுக்குப் பதில் வேறோர் ஆண்மகன் வருவது கண்ட மார்கழி அச்சத்துடன் நடுங்கினாள். ஆனால் மானேந்தி ஒரு சில சொற்களால் அவள் அச்சத்தைப் போக்கினான். அரண்மனைகளிலே கூடக் காணமுடியாத பேரழகை அக்காட்டுக் கோபுரத்தில் கண்டு இளவரசன் மதிமயங்கி நின்றான். மாயக்காரனைத் தவிர யாரையும் பார்த்தறியாத மார்கழியும் வீரமும் அழகும் கலந்த இளவரசன் வடிவம் கண்டு மலைப்பெய்தினாள்.