பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மன்பதைக் கதைகள்

67

சென்ற பின்பே அவன் மேலே ஏறுவது வழக்கம். ஆனால் அன்று நெடுநேரம் வரை காத்திருந்தும் யாரும் இறங்கி வரவில்லை. அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. விடியுமுன் சற்றுத் துணிந்து, 'மார்கழி, மார்கழி' என்று கூவினான். அதற்கே காத்திருந்த மாயக்காரன் கூந்தலின் ஒரு கோடியைப் பலகணியில் கட்டி மறுகோடியைக் கீழே வீசினான். இளவரசன் மனமகிழ்வுடன் அதைப் பற்றி மேலே ஏறினான்.

கோபுரத்தின் உட்கூடத்தில் அரையிருள் சூழ்ந்திருந்தது. மாயக்காரன் மார்கழியின் ஆடைகளைச் சுற்றிக்கொண்டு நின்றிருந்தான். அவனையே மார்கழி என்று நினைத்த இளவரசன் அவனை ஆர்வத்துடன் அணைக்க முனைந்தான். 'இன்று ஏன் மாயக்காரன் வரவில்லை!' என்று பேச்சையும் தொடங்கினான். மாயக்காரனுக்கு இப்போது துயரமும் கோபமும் பீறிட் டெழுந்தன. அவன் இளவரசனை மனங்கொண்ட மட்டும் அடித்துத் துவைத்தான். அவன் முகத்தில் குத்திய குத்துக்களால் கண்கள் குருதி கக்கிக் குருடாயின. இந்த நிலையில் மாயக்காரன் அவனைக் குற்றுயிருடன் கோபுரத்திலிருந்து கீழே எறிந்தான். அத்துடன் அவன் ஒழிந்தான் என்ற உறுதியில் தன் வீடு சென்றான்.

தன் மாயங்கள் பலிக்காத காரணத்தினால், மாயக்காரன் புது வாழ்வு முறிவுற்றது. ஒரு தலைமுறை வாழ்நாள் புது வாழ்வு தொடங்காமலே முடிவுற்றதால், ஒன்றிரண்டு நாட்களுக்குள் அவன் குற்றுயிராய் வதைப்பட்டு மாண்டான். அதேசமயம் அவனால் வீசியெறியப்பட்ட இளவரசன் மானேந்தியின் உடலிலிருந்து அவன் எதிர்பார்த்தபடி உயிர் போகவில்லை. பலகணியில் கட்டியிருந்த மார்கழியின் கூந்தலே அவன் விழும்போது அவனைச் சுற்றிக் கொண்டது. கட்டு இப்போது தளர்ந்திருந்ததனால், அவன் சுமை தாளாமல் விழுந்தது. மயிர்ச் சுருளுடன் சுருண்டு விழுந்ததால் அவன் உடலில் முன்னிருந்த நோவன்றிப் புதிதாக எத்தகைய நோவும் ஏற்படவில்லை. அத்துடன் தன் காதலியின் நினைவை ஊட்டிய தலைமுடியே தன் உயிரும் காத்ததை எண்ணி அதை ஆர்வத்துடன் போர்வையாகச் சுருட்டிப் போர்த்த வண்ணம் தன் உடல் தேறுமட்டும் அவன் அங்கேயே கிடந்தான்.