68
அப்பாத்துரையம் - 39
எந்தக் கணமும் மாயக்காரன் திரும்பி வந்து தன்னைக் கொன்றுவிடக் கூடும் என்று அவன் அஞ்சினான். ஏனெனில் மாயக்காரன் இறந்தது அவனுக்குத் தெரியாது. உடல் தேறியதும் அவன் எழுந்து தட்டித் தடவி நடந்தான். கண்மட்டும் தெரியவில்லை. அந்நிலையில் என்ன செய்வது, மார்கழியை எங்கே தேடுவது என்று விளங்காமல் அவன் திகைத்தான்.
காட்டிலே திக்குத்திசை தெரியாமல் அலைந்து திரிந்து எப்படியோ அவன் மார்கழியின் தாய் தந்தையர் வாழ்ந்திருந்த திருவதிகை வந்து சேர்ந்தான்.
இங்கே அவன் எங்கும் தட்டித் தடவிக் கொண்டு சென்று இரந்துண்டான். அன்புடன் உணவு கொடுப்பவரிடம் அவன் 'மார்கழி' என்ற இளநங்கையைப் பற்றிக் கேட்பான். சிலர் தமக்குத் தெரியாதென்று கைவிரித்தனர். ஆனால் முதியவர் சிலர் வியப்புடன் அவனையே திருப்பிக் குறுக்குக் கேள்வி கேட்டனர்.
அவன் மார்கழியைப் பற்றித் தான் அறிந்ததை அவர்களுக்கு உரைத்தான். அவர்களிடமிருந்து பல ஆண்டுகளுக்குமுன் ‘மார்கழி” என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் காணாமல் போய்விட்டது என்பதையும், தாய்தந்தையர் அத்துன்பத் தாலேயே இறந்துவிட்டனர் என்பதையும் அவன் தெரிந்து கொண்டான். அத்துடன் மாயக்காரன் இருந்த இடமும் அவனுக்குக் கதைப் போக்கிலிருந்தே தெரிந்துவிட்டது.
அவன் கண்கள் இதற்குள் உட்புண்ணாறி வந்தன. அவனிடம் பழகிவிட்ட பெரியார்களுள் ஒருவர் மருத்துவர். மேலும் பண்டுவம் பார்த்து, அவன் கண்பார்வை முழுவதையும் அவர் மீட்டுத் தந்தார்.
கண்பார்வை வந்ததும் மானேந்தியின் முதல் வேலை மாயக்காரன் வீட்டில் சென்று உளவு பார்ப்பதாகவே இருந்தது. ஊரில் பெரியாரான சில நண்பர்களுடன் அவன் தோட்டத்து மதில் ஏறி உள்ளே நுழைந்து பார்த்தான். பயிர்கள் பார்ப்பார் இல்லாமல் அழிந்து கிடந்தன. மாயக்காரன் உடலும் வாடி வதங்கி ஈ எறும்புகளால் அரிக்கப்பட்டு உருவற்றுக் கிடந்தது. மாயக்காரனைப் பற்றிய அச்சம் நீங்கி அவர்கள் மார்கழியைப் பற்றி புலனறிய எங்கும் தேடினர். எதுவும் அகப்படவில்லை.