74
அப்பாத்துரையம் - 39
கவனித்துக் கொண்டாள். மேலும் வீட்டில் எத்தனையோ வேலையாட்கள் இருந்தாலும் அருண்மொழியின் வேலையை வேறு எங்கும் செய்யவிடாமல் அன்பரசி தானே முந்தி நின்று அவற்றை முடித்து வந்தாள். இதுமட்டுமன்று. அவன் உடுத்த ஆடை அணிகளுடனேயே வந்திருந்தான். தன் தந்தையிடமோ தாயிடமோ அதுபற்றி அவன் கேட்க நேரும் என்று அவள் அறிந்தாள். அப்படிக் கேட்க விடாமல் அவள் தானே அவற்றைத் தன் செலவுக்கென்று பெற்ற பணத்தைக்கொண்டு வாங்கி அவன் பெட்டியில் அடுக்கி வைத்தாள். இங்ஙனம் தாயின் ஆர்வம் கூட எதிர்பார்த்திராத அளவில் அன்பரசியின் உள்ளம் அருண் மொழியைச் சுற்றி இழைந்தது.
பண்ணன் பாடிலி எதையும் கணக்குப் பார்ப்பவன் என்பது பாடுமாங்குயில் அறிந்ததே. ஆகவே தன் மருமகனை அவன் ஓர் ஏழை உறவினனாக நடத்த அவள் விடவில்லை. தொழிலகத்தைப் பார்க்க ஓர் ஆள் வேண்டிவந்த சமயம், அவள் அருண்மொழிக்கே அவ்விடத்தைக் கொடுக்கும்படி பரிந்து பேசி, அவனை அதில் அமர்த்தினாள். அருண்மொழி எல்லாருக்கும் நல்லவனாக நடந்து கொள்ளும் இயல்புடையவன். ஆகவே, வீட்டில் மற்ற எல்லாருக்கும் உறவினனாகவும், பண்ணன் பாடிலிக்கு மட்டும் தொழிலகத்தில் தொழில் நேரத்தில் தொழிலாளியாகவும் வாழ்ந்துவந்தான். இந்த நிலையிலேயே அன்பரசியின் உள்ளத்தில் உள்ளார்ந்த பாசத்தை அவன் முழுதும் காண வாய்ப்பு ஏற்பட்டது.
தன் காரியங்களில் அன்பரசி காட்டும் அக்கறையை அருண்மொழி அறியாமலில்லை. அவன் உள்ளமும் ஏற்கெனவே அவளிடம் வரவர ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் நீடித்த உழைப்பின் பயனாக ஒன்றிரண்டு நாட்கள் அவன் தொழிலகம் போகமுடியாமல் இருந்தது. அச்சமயம் அன்பரசி தானே அவனுக்குத் தாயாகவும் தாரமாகவும் தங்கை யாகவும் பிள்ளையாகவும் இருந்து, அவன் உடலும் உளமும் பேணி ஆதரவு செய்தாள். அந்த அன்புக்கனிவின் இனிமையில் அருண்மொழி தன் நோயை மறந்தான். மேலும் அவள் தோழமையின் இன்பத்தை இன்னும் பெறும் ஆர்வத்தினால் அவன் தன் நோய் பெரிதும் நீங்கியபின்னும் அது நீடிப்பதாகப் பாசாங்கு செய்யத் தொடங்கினான்.