20. பொங்கு மாவளம்
பொங்குக வாழ்வு!
பொலிக செல்வங்கள்!
புதுவளம் பெறுக பொன்னார் தமிழகம்!
இமயத்தில் புகழின் எல்லை கண்ட தமிழன் இன்று அதே மயத்திலேயே கயமையின் எல்லை கண்டுள்ள சீன அரசின் கொட்டமடக்கி, பாரதப் பெரு நிலத்துக்கு மீண்டும் புதுவாழ்வளிப்பானாக!
வள்ளுவன் புகழைத் தமிழினம் வையகமெல்லாம் வாரி வழங்கி உலகுக்குப் புதுவழி காட்டுக!
பொங்கல் விழா! வாழ்வில் பொங்குமா வளம் அவாவும் திருநாள், அவாவி அது காண வழிவகுக்கும் தமிழினத்தின் பெரு நாள்!
செந்நெல் விழா, செங்கரும்பு விழா, செந்தமிழ் விழா அது! முக்கனி விழா, மூவேந்தர் ஆண்ட திருநாட்டு விழா, முத்தமிழ் விழா!
முப்பால் விழா! வள்ளுவன் விழா! வள்ளுவன் கண்ட அற விழா, பொருள் விழா, இன்ப விழா! மூன்றும் உள்ளடக்கிய வீட்டு விழா! வீட்டின் விரிவாகிய நாட்டு விழா! நாட்டின் விரிவாகிய இனவீட்டின் விழா, மனித இனவிழா, மனிதக் குடும்பத்தின் மாண்பாராயும் விழா!
வள்ளுவன் கருத்தில் கனாக்கண்ட நாடா வளங்கண்ட நாட்டை உளங்கண்டு நாடும் விழா! அதற்கான திட்டம் தீட்ட வள்ளுவன் ஏடு பயிலும் கன்னித் தமிழன் மனித இனத்துக்கு அறைகூவலிட்டழைக்கும் விழா!