21. வருங்கால உலகம் பற்றி
வள்ளுவன் கண்டகனவு
நிகழ்காலம் என்னும் தூரிகை கொண்டு, சென்ற கால அனுபவமென்னும் வண்ணந் தோய்த்து மனித இனம் காலத்திரையில் வரைய இருக்கும், வரைந்து வரும் ஓவியமே வருங்கால உலகம். ஆனால், காலம் செல்லுந்தோறும் வருங்காலம் நிகழ்காலம் ஆகிக் கொண்டு வருகிறது. நிகழ் காலமும் சென்ற காலமாகி அதனுடன் ஒன்றுபட்டு அதைப் பெருக்கிக் கொண்டே வருகிறது.
மனித இனம் ஒவ்வொரு கணமும் நிகழ்காலமென்னும் பழைய தூரிகையை எறிந்துவிட்டு, அடுத்த கணமாகிய புதிய தூரிகையைக் கைக்கொள்கிறது. ஆனால், ஒவ்வொரு கணமும் பழைய வண்ணத்துடன் புது வண்ணமும் தோய்ந்து கொண்டே செல்கிறது.
பழமையின் பெருமை இது.
வருங்கால உலகமாகிய படத்தைக் கலைஞன் சிறுகச் சிறுகத் தீட்டி; சில சமயம் அழித்தழித்துப் புதிதாக வரைகிறான். சில சமயம் பழைய வண்ணத்துக்குப் புது மெருகூட்டி, பழமையும் புதுமையும் குழைத்துப் பழய உருவுக்குப் புத்துயிரும், பழைய உயிருக்குப் புதிய ஆற்றலும் மாறிமாறி வழங்கிக் கொண்டேதான் வருகிறான். இவ்வாறு அவன் வரைந்து வரும் படத்தைத்தான் நாம் மனித இன நாகரிகம் என்று கூறுகிறோம்.
ன
புதுமையின் அருமை இது.
மனித இன நாகரிகம் என்று ஒரே படம். ஆனால் அதில் கால்விரல் நகத்தினையே கொண்டு அதையே முழுப் படமாகக் கொண்டு, பல படங்களாகக் கருதியவன் உண்டு. அழகு காணாத