பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

117

வண்ணத்துடன் புது வண்ணம் கலந்து புதுப்புது பெருகு ஊட்டப் பார்த்தாலும், இவையெல்லாம், ஒரு கலைஞனின் ஒரு கலைத் திட்டத்தின் அடிப்படையில் அமைந்த, அமைந்துவரும், அமைய இருக்கும் படிப்படியான முன்னேற்றமே என்று அவர் பறை சாற்றினார்.

ஆம்.

படம் ஒன்று.

படம் வரைவதற்குரிய திரை ஒன்று.

திட்டமிட்டுப் படம் வரையும் கலைஞனும் ஒருவனே. வள்ளுவர் கண்ட முப்பொருள் உண்மை இது.

படம் மனித வாழ்க்கை, வருங்கால உலகம்; மனித இன நாகரிகத்தின் குறிக்கோளான இன்பம். கலைஞனின் உயிரும் குறிக்கோளும் இதுதான். ஏனெனில் அக்குறிக்கோளுருவாகவே அவன் விளங்குகிறான்.

திரை மனித வாழ்க்கை நடத்துவதற்குரிய ஆதாரம். இன்பத்தை அடையும் சாதனங்களின் தொகுதி, பொருள் இதுவே இயற்கை என்னும் திரை மீது, சமுதாய அமைப்பென்னும் சட்டமிட்டு; அரசியல் என்னும் வரம்பு கோலி, சமுதாயமுறை ஆட்சி முறை என்னும் புறக்கோலமிட்டு, படத்துக்காகக் கலைஞன் வகுத்து வைத்த பின்னணி ஆதாரமாகும்.

படத்துக்கு வண்ணமும் உருவமும் தர, கலைஞன் உள்ளத்திலுள்ள கருத்தில் உருவங்களுக்குப் புறவடிவம் தர, அவன் வகுத்துக் கொண்டுள்ள பல வண்ணப் படிவங்களான வண்ணமைகள், தனி மனிதன், கடமைகள் உரிமைகளாகிய ஒளி நிழற் கூறுகளை ஒருங்கமைத்துக் காட்ட அவன் மேற் கொண்டுள்ள நெறிமுறை ஆகிய தூரிகை இவையே அறம். குடும்ப வாழ்வு என்னும் இல்லற மாயும், சமுதாயத் தொண்டு என்னும் துறவறமாகவும், இவற்றுக்குதவும் அன்பு என்னும் சகலப் பண்பு, அருள் என்னும் உயர் பண்பு ஆகியவை அவற்றின் நெறிகளாகவும் அமைகின்றன.

அறம், பொருள், இன்பம் என்னும் இம்மூக்கூறுகளும் ஒருங்கே இணைந்த முழுப் படமே மனித இன நாகரிகம் என்னும் வீடு.