23. ஆரியமும் தீந்தமிழும்
அண்மையில் ஆப்கனிஸ்தானத்திலிருந்து இந்தியாவுக்கு வருகை தந்த அரசியல் பிரதிநிதிகள் ஆப்கனிஸ்தானத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள பழந்தொடர்புச் சின்னம் பற்றி ஒரு புதுமை வாய்ந்த செய்தி தெரிவித்துள்ளார்கள். இதை நம் பத்திரிகைகள் நமக்குத் தெரிவித்துள்ளன.
ஆப்கனிஸ்தான் எல்லையிலுள்ள ஒருவகைப் பழங்குடியினர் தமிழ் போன்ற ஒரு மொழியைப் பேசுகிறார்களாம்! கேட்பதற்கு ஒரு தமிழன் பேசினால் தமிழரல்லாத ஒருவருக்கு எப்படி இருக்குமோ அப்படியே அம்மொழி இருக்கிறதாம்!
பத்திரிகைச் செய்தி இவ்வளவே!
அம்மொழியைப்பற்றிய வேறு தகவல்களும் அறிந்து அதனையும் தமிழ் அல்லது தமிழின மொழிகளையும் ஒப்பிட்டு அறிஞர் மேலும் விவரங்கள் தெரிவித்தால்தான் அம்மொழி பற்றி நாம் எதுவும் தெரிந்து கொள்ள முடியும்.
இது இனி வருங்காலம் வழங்க வேண்டிய செய்தி.
ஆனால் அதற்கிடையே தமிழினத்துக்கும் அத்தொலை நாட்டுக்கும் இடையே உள்ள சில தொடர்புகளைப்பற்றி இத் தமிழ்ப் பொங்கற் பருவத்தில் விளக்கம் தருவது பொருத்தமா யிருக்கும்.
தமிழ் என்ற சொல் திராவிடம் என்ற சொல்லிலிருந்து சிதைந்து வந்த திரிபு என்று சமஸ்கிருதவாணர் முன்னால் கூறிக் கொள்வதுண்டு. அதற்கேற்ப இன்று ஆராய்ச்சி அறிஞர் தமிழ் மொழியை மட்டுமன்றி, அதனுடன் தொடர்புடைய வேறு மொழிகளையும் சேர்த்துத் தமிழ் மொழி இனத்தைக் குறிக்க இச்சொல்லை வழங்கினாலும், சமஸ்கிருத மொழியில் அது தமிழ் மொழியைக் குறிக்கவே பெரிதும் வழங்கிவந்துள்ளது.