பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




25. இமய எல்லை

வாழ்க்கை, வாழ்வதற்கே என்று கருதி வாழ்ந்தவர்கள் பண்டைத் தமிழர்கள். ஆனால், அவர்கள் இன்பம் மட்டுமே குறிக்கொண்டு, சோம்பி வாழவில்லை; பொருள் ஈட்டுவதிலும் சலியாது உழைத்தனர். திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவதில் அவர்கள் என்றும் தயங்கியவர்கள் அல்லர். அதேசமயம் இன்பத் தையும், பொருளையும் அவர்கள் தகாத வழியில் பெற விரும்ப வில்லை. அறவழி நின்று ஈட்டினர், அறவழி நின்று இன்பம் துய்த்தனர். வாழ்ந்தால் புகழுடன் வாழவேண்டும் என்று கருதினர். மானம் காத்து, தன் மதிப்புக்கு இழுக்கு வந்தால் சாதலையே விரும்பினர். உயிரை வெல்லமாகக் கருதிக் கோழைகளாக வாழ்ந்தவர்களல்லர் தமிழர்.

உலகின் வீர இனங்களிலே, வீர இனமாகத் திகழ்ந்தவர் தமிழர். இந்தியாவிலே இரசபுத்திரரின் வீர காதைகளைப் படிக்கி றோம்; மராட்டியரின் வீர வரலாற்றில் நாம் ஈடுபடுகிறோம்; அவற்றின் மூல இலக்கணத்தை நாம் புறநானூற்றில் காணலாம். பதிற்றுப் பத்தில், சேர அரசர்களின் போர்க் காவியங்கள் திரைப் படச் சுருள்போல் பத்துப் பத்தாக, நம் கண்முன் அடுக்கடுக்காக ஓடுகின்றன. களவழி நாற்பதில், போரிலேயே திளைத்த சோழப் பெருமன்னன் செங்கணானின் செங்குருதிப் போராட்டங்களில் திளைக்கிறோம். கலிங்கத்துப் பரணியின் தமிழரின் வீரம் கோதா வரி ஆறு தாண்டி, மகாநதியின் இரு கரைகளிலும் போர்முரசு கொட்டிய செய்தி அறிகிறோம்.

ஆனால், தமிழர் வீரத்தின் சிற்றெல்லைதான் காவிரியும், கோதாவரியும், அதன் பேரெல்லை இமயமாகவே காட்சி யளிக்கிறது.

தமிழகத்தின் தென் எல்லை குமரி. ஆனால், குமரியில் எந்தத் தமிழரசரும் சென்று தமிழக்கொடி நாட்டியதில்லை.