31. சோழன் மெய்க்கீர்த்தி
உலகப் பேரரசுகளிடையே தமிழகப் பேரரசுகளுக்குப் பொதுவாக - சோழப் பெரும் பேரரசுக்குச் சிறப்பாக உரிய பல தனிப் பண்புகள் உண்டு.
உலக அரசுகள் - பேரரசுகளில் மிகப் பலவும், கரையாட்சி அரசுகள்- கரைப் பேரரசுகளே!
அலெக்சாண்டரின் கிரேக்கப் பேரரசு - ஜூலியஸ் சீசரால் நிறுவப்பட்ட உரோமப் பேரரசு - நெப்போலியனின் பிரெஞ்சுப் பேரரசு - செர்மானியப் பேரரசு - ஆகிய புகழ் பெற்ற ஐரோப்பியப் பேரரசுகள் யாவும், நிலப் பேரரசுகளாகவே அமைந்தன!
இதுபோலவே, இந்தியாவிலே அசோகன் முதல் அக்பர், அவரங்கசீப் வரையுள்ள புகழ்வாய்ந்த இந்தியப் பேரரசுகள் அனைத்துமே நிலப் பேரரசுகள்தாம் - கடற் பேரரசுகளாக யங்கவில்லை! தென்னகத்தில், பாமினி - விசயநகரப் பேரரசுகள் கூட இப்பொது விதிக்கு விலக்கல்ல!
சீனப் பேரரசுகளும், கடற் பேரரசுகளாகச் சிறப்புற்றதில்லை!
-
சமக்கிருத இலக்கியத்தில் சமணர் இலக்கியத்தில் 'பேரரசர்' (சக்கரவர்த்தி) என்பவருக்கு ஓர் இலக்கணம் கூறப்பட்டுள்ளது; 'அவர் பேரரசின் பரப்பு இரு திசையிலும் கடற்கரைவரை, அளாவி இருக்க வேண்டும்' என்பதே அது!
கி.பி.நான்காவது - ஐந்தாவது நூற்றாண்டுகளில், இந்தியா வில் ஆண்ட புகழ்மிக்க குப்த பேரரசர்களுக்கு இந்த இலக்கணம் பொருந்தும் என்பதை மாக்கவிஞன் காளிதாசன், ‘கடலிலிருந்து கடல்வரை ஆண்ட பேரரசர்' (ஆசமுத்ரக்ஷிதீசா:) என்று அவர்களைப் பாராட்டியதன் மூலம் நினைவூட்டியுள்ளான்!