பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

187

ஏனெனில், தேசிய இயக்கங்கள், குருதி மரபில் இயல்பாக வந்த உணர்ச்சிப் புயல்களாக மட்டுமே இயல்பாக இயங்க முடியும்; அவை நிறைபயன் தர வேண்டுமானால் - திசையும் நெறியும், உருவும் திருவும் டை ய இயக்கங்களாக வளரவேண்டுமானால் - அவை அறிவியக் கங்களாகவும், அறிவுப் பண்பின் திட்டத் திறமுடைய இயக்கங்களாகவும் அமைதல் வேண்டும்!

தமிழகத்தின் அயலாட்சிக் காலம் அதாவது 16ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலம் தமிழகத்துக்கு மட்டுமோ, இந்தியாவுக்கு மட்டுமோ அயலாட்சிக் காலமாக அமையவில்லை! ஆசியா, ஆப்பிரிக்கா முழுமைக்கும் - உலகின் பெரும் பகுதியிலும் உள்ள பிற்பட்ட நாடுகள் பலவற்றுக்குமே அயலாட்சிக் காலமாகத்தான் அமைந்து இருந்து வந்துள்ளது!

அயலாட்சிக் காலத்தில் தமிழகத்திலும் - இந்தியாவிலும், பெரும்பாலும் ஆங்கில மொழியே ஆட்சி மொழியாக மட்டுமன்றிக் கல்வி மொழியாகவும், அறிவு - கலை -நாகரிக மொழியாகவும் நிலவியிருந்தது; இது பொதுவாக எல்லா நாடுகளிலும், நாட்டு மக்கள் வாழ்விலும் மொழியிலும் அடிமை நிலைமை-வறுமை நிலையை வளர்ப்பதாக அமைந்திருந்த தனாலும், தமிழகத்துக்கே-தமிழுக்கே-மற்ற எல்லா நாடுகளையும், மொழிகளையும் விடத் தீங்கு தருவதாய் இருந்தது!

தமிழகத்தின் இத்தனித்தன்மையை நாம் நன்கு ஆய்ந்து காண்டல் வேண்டும்.

ஆங்கிலம் முதலிய மேலை ஆதிக்க மொழிகளின் ஆட்சியாலேயே உலகிலும், இந்தியாவிலும் மிகப் பல மொழிகள் புதிதாக இலக்கிய ஆட்சியும் - அறிவாட்சியும் பெற்றன!

பல உலக மொழிகள், தமக்கென எழுத்தின்றி ஆங்கில எழுத்தையே மேற்கொண்டுள்ளன!

நல்ல எழுத்து முறை அமையாத நிலையிலும், பல மொழிகள், தம் முன்னைய எழுத்து முறையைக் கைவிட்டு, ஆங்கில எழுத்தையே பயன்படுத்துகின்றன!