34. நான் கண்ட தமிழ் மேதைகள்!
(சென்னை மணவழகர் மன்றச் சார்பில், தோழர் கூ.இர. இராசாமணி எல்.ஈ.ஈ. தலைமையில் நடைபெற்ற மறைமலையடிகள், திரு.வி.க. ஆகியோரின் நினைவுநாள் விழாவில் பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் எம்.ஏ.எல்.டி. அவர்கள் பேசியதாவது:)
ஆண்டுதோறும் இம்மன்றத்தில் பேசும் வாய்ப்பைப் பெறும்பயன் முன்பு அறிஞர் அண்ணா அவர்களைப்பற்றிப் பேசினேன். இன்று மறைமலையடிகள், தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாண சுந்தரனார் ஆகிய பெருமக்களைப் பற்றிப் பேசும் வாய்ப்புப் பெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
சென்ற ஊழியைப்பற்றி - வரலாற்றுக் காலத்தைப் பற்றித் தெளிவாக நாம் அறிந்துகொள்ள வேண்டுமாயின், அவ்வூழியில் வாழ்ந்த பெருமக்களை நினைவு கூர்தல் வேண்டும்.
அவ்வண்ணம் நடைபெற்ற ஊழியின் சிறப்பை நாம் முழுதும் உணர வேண்டுமாயின், தவத்திரு மறைமலையடிகள், தமிழ்த் தென்றல் திரு. வி. க. ஆகியோரைப் பற்றி முதலில் நாம் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்.
இற்றை நாளில் மலர்ந்திருக்கும் - மலர்ந்து வரும் தமிழ் உணர்ச்சிக்கு தமிழ் ஆர்வத்துக்கு வித்தூன்றிய தனித்தமிழ் வீரர்கள் தவத்திரு மறைமலையடிகளும், தமிழ்த்தென்றல் திரு. வி. க. அவர்களும் ஆவார்கள்.
அவர்கள், தமிழின் வளர்ச்சியிலும் தனித்தன்மையை நிலை நாட்டுவதிலும், காப்பதிலும், உடலும் - உயிரும்போல் இரண்டறக் கலந்து பணியாற்றியவர்கள்.
இவ்விரு பெரும் 'தமிழ் மேதை’களும் தோன்றியபோது தமிழ்ச் சமுதாயம் என்றுமில்லாத அளவுக்குத் தாய்மொழியை