பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




198

அப்பாத்துரையம் – 4

மறந்திருந்தது. ஏனெனில், அப்போதிருந்த மக்களின் ஆர்வம், 1907-ல் தமிழ் நாட்டில் துவக்கப்பட்ட தமிழ்நாட்டுத் தேசியக் காங்கிரசு 'அகில இந்தியா' என்ற காள்கையால் ஈர்க்கப்பட்டது.மற்றும் ஒரு சிலர் என்ற அகில உலக அமைப்பை அன்னிபெசண்டு அம்மையாரின் தலைமையில் நிறுவி, மக்களின் கருத்தை ‘அகில உலகம்' என்ற கொள்கையால் ஈர்த்தனர்.

இவ்விதம், 'அகில இந்தியா', 'அகில உலகம்' என்ற கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அக்காலத் தமிழர்கள், தமிழ் மொழியையும், தமிழ் நாட்டையும் மறந்தனர். இவ்வித ஒரு மயக்க நிலை,1905,1920 ஆகிய ஆண்டுகளிடை தமிழ் மக்களை மிகவும் ஆட்கொண்டது. இக்காலத்தில்தான் தவத்திரு மறைமலை யடிகளும், திரு. வி. க. அவர்களும் மக்களிடையே தாய்மொழி உணர்ச்சியை - பற்றினை ஏற்படுத்தப் பாடுபட்டனர்.

இவ்விருவரும் ஒரு மலை போன்று அக்காலத்தில் விளங்கினர்; மலையின் அடிபாகம் போன்ற திரு.வி.க.வும், மலையுச்சியைப் போன்று அடிகளாரும் விளங்கினர் எனக்கூறின் அஃது மிகையன்று.

இவர்கள் ஒழுகிய 'தனித் தமிழ்க் கொள்கையில் ஆசிரியராக அடிகளாரும், அவரது மாணவராக திரு.வி.க. அவர்களும் விளங்கினர்.

மறைமலையடிகள் தமிழாராய்ச்சி நூல்கள், இலக்கிய நூல்கள், 'அம்பிகாபதி' என்ற நாடகம் போன்ற நூல்களை இன்றமிழில் இயற்றித் தமிழ்த் தொண்டாற்றியவர்; பாமர மக்கள் படித்து இன்புறும் அளவுக்குத் தமிழிலக்கியங்கள் தோன்றுதல் வேண்டும்' என எண்ணியவர் அடிகளார் ஆவார்கள்!

அவ்வண்ணமே திரு.வி.க. அவர்களும், எல்லாத் தலையாய பொருள்களைப் பற்றியும், மதங்களைப் பற்றியும், துறைகளைப் பற்றியும் தனித் தமிழில் எழுதியவர் - பேசி வெற்றி கண்டவர் 'தமிழால் முடியும்' என்ற நிலையை ஏற்படுத்தியவர்.

தமிழ்ப் புலவர்கள் பேசுவது தமிழ் மக்களுக்குப் புரியும் - பாமர மக்களும் உணர்ந்துகொள்வர்; ஏனெனில், மற்றைய மொழிகளான தெலுங்கு, கர்நாடகம், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் பேச்சு நடைக்கும் இலக்கிய நடைக்கும் ஆச்சரியப்படத்தக்க வேறுபாடு உள்ளது.