(210)
அப்பாத்துரையம் - 4
தெய்வத் திருக்குறள், தமிழகத்தில்கூட இந்த இருபதாம் நூற்றாண்டில் புதுப் புகழெய்தி இருக்க முடியாது! மேலும், 'அதுவே உலகப் பொதுமறை' என்ற மெய்ம்மை விளங்காமலே போயிருக்கும்!
1946-ல் வான்புகழ்த் தந்தை பெரியார் அவர்கள் நடத்திய திருக்குறள் மாநாட்டுக்குமுன் எத்தனை திருக்குறள் ஆராய்ச்சி ஏடுகள் - எத்தனை திருவள்ளுவர் கழகங்கள் இருந்தன; அதன்பின் எத்தனை திருக்குறள் ஆராய்ச்சி ஏடுகள் - எத்தகை திருவள்ளுவர் கழகங்கள் எழுந்துள்ளன என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால், இது விளங்கும்.
இதுமட்டுமோ? திராவிட இயக்கம் எழுஞாயிறாகத் தோன்றியிராவிட்டால், சங்க இலக்கியமும், தொல்காப்பியமும், திருவாசகமும், தேவாரமும், திருநாலாயிரமும், சிலம்பு - மேகலை - சிந்தாமணி, சூளாமணி போன்ற காப்பியங்களும் உலக இலக்கிய வானில் ஒளிவீசத் தொடங்கியிருக்கமாட்டா!
-
அத்துடன், திராவிட இயக்கம் எழுச்சி தந்திராவிட்டால், இந்து சமயத்தின் பக்திக்கிளைக்குரிய தாய்க்காப்பியமாகிய பெரிய புராணமும், தமிழரின் இந்தியத் தேசியக் காப்பியங்களான கம்பராமாயணமும் வில்லி பாரதமும் இந்தியாவின் வீர காப்பியங்களாகிய கலிங்கத்துப் பரணியும் - மூவருலாவும், தமிழ்த் தேசியக் குறுங்காப்பியங்களாகிய தொண்டை மண்டல சதக முதலியவைகளும், தமிழரின் மக்கட் பாடல் வாழ்க்கைப் பாடல்களாகிய பள்ளு அல்லது உழவர் பாடல், குறவஞ்சி, ஊசல், தாலாட்டு, பந்தாட்டப் பாட்டு, பிள்ளைத் தமிழ் முதலியவையும் அறிவுலகுக்கு அறிமுகப்படுத்தப்படாமலே போயிருக்கும்!
'தமிழியக்கம்' என்ற எழுநிலை மாடத்தில் - திராவிட இயக்கம் -அதன் ஏழு தளங்களில் ஒரு தளமாக மட்டும் நிலவலில்லை; அதுவே, 'மொழி இயக்கம்' என்ற முதல் தளத்திலிருந்து, உலக மொழித் தளம் - இந்தியத் தேசியத் தளம் - குடியாட்சி சமதர்ம பொதுவுடைமைத் தளங்கள் - ஓருலகப் பண்பாட்டியக்கத் தளம் ஆகிய அதன் மேல்தளங்களுக்கெல்லாம் செல்லும் ஒரே ஏணிப் படிக்கட்டாகவும் அமைந்து, அம்முறையில் மேன்மேலும் எழுந்து மலர்ச்சியுற்று வருகிறது!