புதியதோர் உலகம் செய்வோம்
231
ஊடுருவி நிற்கும் ஒரு தமிழ் அறிவுப் பண்பு நெறியின் நோக்காகக் கொண்டாலன்றி, அந்நோக்குடன் உலகத் தமிழ் இயக்கத்துக்குப் புதுக் குருதி புதுக் கண்ணோட்டம் - புதிய நடைமுறையார்வம் - புதிய பண்பு வழங்க முடியாது; அவ்வியக்கத்துக்குரிய அருஞ் சிறப்புடன் அதை வளர்த்திடவும் இயலாது!
தனைச் சில ஆண்டுகட்குமுன் நடந்த ஒரு நிகழ்ச்சி சுட்டிக் காட்டுவது ஆகும்.
பிரிட்டன் நாட்டின் பேரறிஞர் ஏ. எல். பாஷம் என்பவர், இந்தியாவின் புதிய உயர் தேசிய வாழ்வில் ஆர்வமீதூர்ந்த அக்கறை கொண்டவர்; இதனை அவர், தாம் இயற்றியுள்ள 'இந்தியா ஓர் உலக அதிசயம்' (The wonder that was Ind) என்ற அரிய பெரிய ஆய்வேட்டில் காட்டியுள்ளார்.
செர்மானியப் பேரறிஞர் ஆல்பெர்ட் சுவைட்சரைப் போலவே இவரும், இந்தியாவின் பல்வண்ணத் தேசியத்தில், மணிமாலையின் ஊடுசெல்லும் ஒரே பொற்சரடு போன்ற மெய்வண்ணத் தேசியப் பண்பாக விளங்கும் மொழி - இலக்கியம், 'தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும் மட்டுமே' என்பதை விளக்கிக் காட்டியுள்ளார்.
இத்தகைய அறிவுலகப் பெரியார், இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து-சென்னைப் பல்கலைக் கழகத்தின் மொழியியற் குழுவில் - தமிழ்ப் பண்பாடுபற்றி ஒரு சொற்பொழிவாற்றினார்; அதில், தமிழின் பல தனித்தன்மைகளைக் கூறியபின், 'இந்தத் தனித்தன்மைகள், மொழியிலும்- இலக்கியத்திலும் உள்ளன என்பதும் உண்மையே; ஆனால், இதனைத் தெற்கு-வடக்கு என்று எதிரெதிராக இருமுனைப்படுத்தும் மரபு (Polarisatin) அணிமைக் காலத்திய செய்தியேயாகும்; பண்டை வரலாற்றில் இதற்கு இடம் கிடையாது' என்று கூறியதுடன் அதில் கருத்து வேற்றுமை இருந்தால் தெரிவிக்கும்படி பல்கலைக்கழக அறிஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
திராவிட இயக்கத்தின் ஆணிவேரான தனித்தமிழ் இயக்கத்தில் ஈடுபாடுடைய வரலாற்று அறிஞர் ஒருவர் முன்வந்து, 'தமிழினம், கடலோடி இனம்' என்பதை நினைவூட்டினார்; ஆனால், அறிவுலகப் பெரியாரோ,