புதியதோர் உலகம் செய்வோம்
-
265
திருவள்ளுவர், தந்தையையும் மகளையும் விலக்கி, தாயையும் மகளையும் மட்டுமே சமுதாய இனத் தொண்டின் மரபுக் கொடி வழிகளாகக் குறித்தது இதனாலேயே ஆகும்!
பழமையின் சிறப்பெல்லாம் அழகாக - அன்பாகத் திரண்ட பண்பின் சின்னம், கலை; பெண்மை வடிவில் தாய்மையும் அதுவே! இதுபோல, புதுமை வளம் பெறுதற்கான அறிவு ஆற்றல் - முயற்சித் திறம் எல்லாம், திரண்ட பண்பின் சின்னம் நூல்; அதாவது அறிவியலும் தொழிலும்; அதுவே, ஆள்வினை அல்லது முயற்சி; ஆண்மை வடிவில் மகன்மையும் அதுவே!
பெண் - இனப் பழமை பேணுகிறாள்!
ஆண் - சமுதாயப் புதுமை, இனப் புது வளம் ஆக்குகிறான்!
இதனால்,
தாய்மையே நிறை பெண்மை!
ஆனால்,
நிறை ஆண்மை - மகன்மையே!
நம் கால அறிவுலக மேதை பெர்னாடு ஷா, புதிது கண்ட தமிழரின் வள்ளுவப் பழமைத் தத்துவம் இது!
'தாய்மை' என்ற சொல்லுக்கு மூலமாம் பண்பு அல்லது முழு முதல் என்ற பொருள் எல்லா மொழிகளிலுமே உண்டு; ஆனால், ‘மகன்மை' என்ற சொல்லுக்குத் தமிழில் மட்டுமே ‘புதல்வன் நிலை' என்ற பொருளும், 'உரிமை' என்ற பொருளும், 'பெருமை' என்ற பொருளும் ஒருங்கே அமைந்துள்ளது காணத் தக்கது ஆகும்.
தமிழன் திருமணத்தை இத்தகைய அறிவாழமுள்ள பொருள் திட்பம் செறிந்த ஆண்மை - பெண்மைத் தத்துவத்தின் அடிப்படையில் தான் அமைந்தான் என்பதை நோக்குக, நோக்குக!
திராவிட இயக்கமே ஒரு திருமண இயக்கம்! தமிழ் மொழியே ஒரு திருமண மொழி! 'பழமை நலம்' என்ற நங்கையுடன் ‘புதுமை வளம்' என்ற நம்பியை இணைத்து வைக்கும் ஒரு மண வாழ்வே திராவிட இயக்கம்! இதையும் நோக்குமின், நோக்குமின்!