5. தென்னாட்டில் ஒரு பொதுவுடைமைப் பூங்கா
தென்னகம் ஒரு புதிய பொது உடைமைப் பூங்காவாக மலர இருக்கிறது. மலர வேண்டும் திருவள்ளுவர் அதற்கான வித்தூன்றி யுள்ளார். சங்க இலக்கியங்கள் அதற்கான உரம் திரட்டி வைத்துள்ளன. நம் கவிஞர் அதைக் கனவு கண்டுள்ளார்.
அதைப் பூங்காவாக ஆக்கும் பொறுப்புடையவர்கள் யார்? ஆர்வ அவாவுடையவர்கள் யார்? ஆற்றலுடையவர்கள், பண்புடையவர்கள் யார்?
பொதுவுடைமை என்கின்ற பெயரை ஒரு தனி உடைமை யாக்கித் தமக்குத் தாமே அப்பெயரைச் சூட்டிக்கொண்டு ஆரிய அழுகல் முதலாளித்துவ அடிப்படையிலமைந்த அகில இந்தியக் கம்பூனிஸ்டுக் கட்சியினரா? பொதுவறமே புகன்ற வள்ளுவர் வழிவந்து, தமிழியக்கமும் தமிழின இயக்கமும் தன்மான இயக்கமும் நடத்தி, அவற்றின் மரபில் திராவிடநாடு கோரும் திராவிட இயக்கத்தினரா? மார்க்சியத்தைக் கனபாடமும் சபிபாடமும் பண்ணி மார்க்சியத்துக்கு உரை எழுதி, விளக்க எதிர்விளக்கச் சட்டங்களுண்டுபண்ணி, மார்க்சிய வழக்கறிஞராக விளங்கும் மார்க்சிய பண்டிதர்களா? மார்க்சிய சிந்தனை மரபிலே இயங்கி, புதிய மார்க்ஸ்களைத் தோற்றுவித்து மார்க்சியத்துக்கும் வள்ளுவருக்கும் மாண்பளிக்க இருக்கும் மாநில இயக்கத்தவரா? தைக் காலம் காட்டும்.
திராவிட இயக்கத்தின் பொதுவுடைமைக் குறிக்கோள், கோட்பாடு, திட்டம் ஆகியவற்றின் சில உருவரைக் கோடுகளாகக் கீழ்வருவனவற்றைக் கூறலாம்.