54
‘பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!’
அப்பாத்துரையம் - 4
ஏதோ மணியடித்தால் போன்ற மெல்லெதுகை, இனிய சொற்களாக மட்டுமே இவை இன்று கருதப்படுகின்றன. அவற்றின் பொருள் தமிழுக்கே சிறப்புரிமையுடைய, ஆனால் உயிர் மரபு காணாத நிலையில், உலக மொழிகள் பலவற்றிலும் அப்பண்புத் தொடர்புடைய தொடர்ச்சிகளே இவை.
'மங்களம்' என்பது மங்காவளம். அதன் மற்றொரு வடிவாகிய ‘மங்கலம்' என்பது 'நாம் மங்கமாட்டோம்!' என்று உறுதி கூறுகிறது. வாடாமலர், நித்திய மல்லிகையின் பண்பை அது நினைவூட்டுகிறது- ஆம், மொழிகளிடையே, பண்பு நிறைந்த தொன் மொழிகளிடையே கூட, தமிழ் ஒரு வாடாமலர், நித்திய மல்லிகை. சமஸ்கிருதத்துக்கும் கிரேக்க இலத்தின் மொழி களுக்கும், எகிப்திய சால்டிய, சுமேரிய ஏலமிய, சிந்துவெளி வாழ்வுகளுக்கும் முன் பிறந்து, அவை எலாம் மங்கி மறுகி, வாடி வதங்கி, தம் வாழ்வும் தம் பிள்ளை வாழ்வும், பிள்ளை பிள்ளை வாழ்வும் மறக்கப்பட்ட பின்னரும் வாழ்கிறது.இன்னும் புதுவாழ்வு அவாவி நிற்கிறது. மீண்டும் ஒரு புத்துலகைப் படைக்கவல்ல பண்பார்ந்த திராவிட இயக்கம் என்னும் தட்டில் திராவிட முன்னேற்றக் கழகமென்னும் பனிநீர்ச் செம்பேந்தி, புதுத் தமிழ்ப் புத்தமிழ்த்தேனாறும் புதுக்கலை மலர்கள் தாவ எழுங் கால்களுடன் மனித இனத்தைப் புன்முறுவலுடன் நோக்கி நிற்கின்றது!
‘பொங்குதல்' உலக இனங்களில் தமிழினம்மட்டுமே கண்ட வளமார் கனவுக்கு - வாழ்க்கைத் தத்துவத்துக்கு - கலை இலக்குக்கு ஒரு சான்றாக விளங்கும் சொல். பொங்குதல் நிறைவுமட்டுமல்ல, நிறைந்து வழிவதுமட்டுமல்ல. இதை நாம் பொதுவாகக் கவனிப்பதில்லை. வெளியிருந்து ஊற்றி நிறைந்து வழிவதையும் நாம் உவம உருவில் பொங்கி வழிவதாகக் கூறலாமானாலும், பொங்குதல் என்ற சொல் 'சோறு பொங்குதல்', ‘தேறல் பொங்குதல்' (தோசை மாப்பொங்குதல்) ஆகிய இரண்டு இயைபியல் நிகழ்ச்சிகளுக்கே (Chemical action) தனிப்பட வழங்கப்படுவது. இவற்றுள் தேறல் பொங்குதல் இயற்கைப் பொங்குதல், உயிர்ப் பொங்கல் (Natural and Organic Efferviscence) -